பணியில் இல்லாத நுாலகர் விளக்கம் அளிக்க உத்தரவு கலெக்டர் நுாலகத்தில் திடீர் விசிட்

தேனி: பெரியகுளம் முழுநேர நுாலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் திடீரென ஆய்வு செய்து பணிநேரத்தில் இல்லாத நுாலகர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

பெரியகுளம் தென்கரையில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணிவரை செயல்படும் முழுநேர நுாலகம் உள்ளது. இங்கு இரண்டாம் நிலை நுாலகர்கள் விசுவாசம், சவடமுத்து, மூன்றாம் நிலை நுாலகர் பாக்கியலட்சுமி பணியில் உள்ளனர். நேற்று நுாலகம் வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்தது.

காலை 10:20 மணிக்கு நுாலகத்திற்குள் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் திடீரென விசிட் செய்தார். அப்போது 'நுாலகர் எங்கே ஏன் இன்னும் வரவில்லை. விடுமுறை கடிதம் கொடுத்துள்ளாரா', என அங்கிருந்த நுாலகர் பாக்கியலட்சுமியிடம் கேள்வி கேட்டார். அவர் நுாலகர் வந்து கொண்டிருப்பதாக பதில் கூறினார். அதனை ஏற்காத கலெக்டர் நுாலகர் பணிநேரம் காலை 8:00 மணி,தற்போது 10:30 மணி ஆகியும் ஏன் வரவில்லை. அலைபேசியில் தொடர்பு கொள்ள உதவியாளருக்கு உத்தரவிட்டார்.

அங்கு இருந்த வாசகர்களிடம் நுாலகர் தினமும் வருவாரா, எத்தனை மணிக்கு வருவார் என கேள்வி கேட்டார். பின் முதல் தளத்தில் உள்ள நுால்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்றார்.

அங்கு அரசு தேர்விற்கு படித்து கொண்டிருந்தவர்களிடம் வசதிகள் பற்றி பேசினார். அப்போது நுால்கள் வைத்துள்ள ரேக்குகள் துாசியும், ஒட்டடை படர்ந்து இருந்ததை கண்டு அதிருப்தி அடைந்தார். நுாலகரிடம் உங்கள் வீட்டில் இப்படி துாசி, ஓட்டடை இருந்தால் இப்படித்தான் வைத்திருப்பீர்களா, அரசு சம்பளம் பெறும் ஊழியர் பணி செய்யும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா, பல லைட்டுகள் எரியவில்லை ஏன் என சரமாரி கேள்வி கேட்டார்.

நுாலகத்தை சுத்தம் செய்து நாளைக்குள் வாட்ஸ்அப் பில் சுத்தம் செய்த படம் அனுப்பி வைக்க வேண்டும். பணி நேரத்தில் இல்லாத நுாலகருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Advertisement