மந்த நிலை : காட்டன் ரக சேலைகள் விலை உயர்வால் விற்பனையில்...: மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான சேலைகள் தேக்கம்

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், கொப்பையம்பட்டி, முத்துக்கிருஷ்ணாபுரம், சண்முகசுந்தரபுரம், லட்சுமிபுரம் கிராமங்களில் கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் நெசவுத்தொழில் நடந்து வருகிறது.
சக்கம்பட்டி, டி. சுப்புலாபுரம் கிராமங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் 60, 80ம் நம்பர் காட்டன் ரக சேலை உற்பத்தி அதிகம் ஆகிறது. இங்கு உற்பத்தியாகும் சேலைகள் தமிழகம் முழுவதும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர். ஆன்லைன் மூலம் பலரும் சேலைகள் விற்பனை செய்கின்றனர். கடந்த சில மாதங்களில் விற்பனையில் மந்த நிலையால் ஆயிரக்கணக்கான சேலைகள் தேக்கமடைந்துள்ளன. சேலைகளுக்கான உற்பத்தி செலவு அதிகமானதால் விலையை உயர்த்தி விற்க வேண்டிய நிர்பந்தம் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவில், அருப்புக்கோட்டை பகுதிகளில் உற்பத்தியாகும் இதே ரக சேலைகளின் அடக்க விலை குறைவாக இருப்பதால் வியாபார போட்டியில் தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் சேலைகள் தேக்கம் அடைகிறது.
உற்பத்தி அடக்க விலை அதிகரிப்பு
காட்டன் ரக சேலைகள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களில் நூல் விலை சீராக இருந்தாலும் உற்பத்திக்கான மற்ற மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.
சேலைகள் உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கான கூலி சங்கரன்கோவில், அருப்புக்கோட்டை பகுதிகளில் குறைவாக உள்ளது. கூலி வித்தியாசத்தால் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உற்பத்தியாகும் சேலைகளின் அடக்க விலை அதிகமாகிறது. தற்போது சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உற்பத்தியாகும் பிளைன், கட்டம், புட்டா, கோர்வை ரக சேலைகளின் விலை ரூ.400 முதல் ரூ.1500 வரை உள்ளது. இதனால் இப்பகுதியில் பலரும் உற்பத்தியை குறைத்து வெளியூர்களில் சேலைகள் கொள்முதல் செய்து வியாபாரத்தை தொடர்கின்றனர்.
வெளியூர்களில் உற்பத்தியாகும் சேலைகளின் விலையை விட தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் சேலைகளின் விலை ரூ.50 வரை அதிகம் இருப்பதாக வியாபாரிகள் கொள்முதலை குறைக்கின்றனர்.
கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட மந்த நிலையால் தற்போது இப் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான சேலைகள் தேக்கம் அடைந்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலையில் விற்பனையில் மந்த நிலை ஏற்படும். இந்த ஆண்டு விற்பனை கடுமையாக பாதித்துள்ளது என்றனர்.
மேலும்
-
ஜூலை 15ல் இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்: அமெரிக்கா உறுதி
-
வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் தவிப்பு
-
நடிகர் - நடிகையருக்கு 'கோகைன்' விற்றோம்: கடத்தல் புள்ளி கெவின் வாக்குமூலத்தால் சிக்கப்போவது யார்?
-
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு; கர்நாடக சங்கமும் கவுரவிப்பு
-
பா.ஜ., அடுத்த தேசிய தலைவர் யார்: பெண்கள் மூவருக்கு வாய்ப்பு!
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 4 பேர் பலி; 16 பேர் காயம்