பைனலில் திண்டுக்கல் அணி * திருப்பூர் அணியுடன் பலப்பரீட்சை

திண்டுக்கல்: டி.என்.பி.எல்., தொடரின் பைனலுக்கு முன்னேறியது திண்டுக்கல் அணி. சேப்பாக்கம் அணி வெளியேறியது. நாளை நடக்கும் பைனலில் திண்டுக்கல்-திருப்பூர் மோதுகின்றன.
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., 'டி-20' தொடரின் 9வது சீசன் நடக்கிறது. தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற திருப்பூர் அணி, நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. 'எலிமினேட்டர்' போட்டியில் திண்டுக்கல், திருச்சியை வீழ்த்தியது.
நேற்று திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த 'தகுதிச்சுற்று 2' ல் திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் பீல்டிங் தேர்வு செய்தார்.
மிரட்டிய இருவர்
சேப்பாக்கம் அணிக்கு மோகித் ஹரிஹரன் (4), ஆஷிக் (8) என துவக்கத்தில் இருவரும் ரன் அவுட்டாகினர். பின் கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன் இணைந்தனர். புவனேஷ்வர் வீசிய 7வது ஓவரில் அபராஜித், 6, 4, 4 என விளாசினார். இவர் 33 பந்தில் அரைசதம் எட்டினார். 12.1 ஓவரில் சேப்பாக்கம் அணி 100/2 ரன்களை எட்டியது.
அஷ்வின் ஓவரில் (14) 2 சிக்சர் அடித்த ஜெகதீசன், 29 பந்தில் அரைசதம் அடித்தார். சேப்பாக்கம் அணி 15.4 ஓவரில் 155/2 என வலுவான நிலையில் இருந்தது.
திடீர் சரிவு
இந்நிலையில் சசிதரன் ஓவரில் அபராஜித் (67 ரன், 44 பந்து), விஜய் சங்கர் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். ஜெகதீசனை (81 ரன், 41 பந்து) அஷ்வின் போல்டாக்கினார். கடைசி 26 பந்தில் 23 ரன் மட்டும் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது சேப்பாக்கம் அணி. 20 ஓவரில் 178/7 ரன் மட்டும் எடுத்தது. அஷ்வின் 2 விக்கெட் சாய்த்தார்.
விமல் அபாரம்
திண்டுக்கல் அணிக்கு அஷ்வின் (21), ஷிவம் சிங் (27) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. மான் பாப்னா (2) ஏமாற்ற, ஓவரில் திண்டுக்கல் அணி 78/3 ரன் எடுத்தது. பின் பாபா இந்திரஜித், 42 ரன் எடுத்தார். ரோகித் வீசிய 17 வது ஓவரில் விமல் குமார் (4, 6, 6, 6, 6, 6) 34 ரன் விளாச வெற்றி எளிதானது. இவர் 65 ரன்னில் (30 பந்து) அவுட்டானார். திண்டுக்கல் அணி 18.4 ஓவரில் 182/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

Advertisement