இந்தியாவின் ஒலிம்பிக் கனவுக்கு சிக்கல் * ஐ.ஒ.சி., புதிய நெருக்கடி

புதுடில்லி: ஐ.ஒ.சி.,யில் பல்வேறு உத்தரவுகளால் இந்தியாவின் ஒலிம்பிக் கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகின் பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். 4 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும். கடைசியாக பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. அடுத்து 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், 2032ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடக்க உள்ளன. வரும் 2036ல் இந்தியாவில் இப்போட்டியை நடத்த முயற்சி நடக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, 2036ல் ஆமதாபாத்தில் ஒலிம்பிக் நடத்த விருப்பம் தெரிவித்து, இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஒ.ஏ.,), சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் (ஐ.ஒ.சி.,) விண்ணப்பித்தது.
இதற்கு ஐ.ஒ.சி., தரப்பில் இந்தியாவுக்கு பல 'அட்வைஸ்' தரப்பட்டுள்ளன.
இதன் படி,
* ஐ.ஒ.ஏ., தலைவர் பி.டி.உஷா, நிர்வாக குழு இடையில் கடந்த 2 ஆண்டாக நிலவும் பிரச்னை சரி செய்யப்பட வேண்டும். இதனால் 2024 அக்டோபர் முதல், இந்தியாவுக்கு சர்வதேச தடகள நிதி வழங்கப்படவில்லை.
* 2023 உலக ஊக்கமருந்து தடுப்பு மைய அறிக்கை படி, இந்திய வீரர், வீராங்கனைகள் தடை செய்ய மருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவுக்கு அடுத்து, இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் ஊக்கமருந்து பயன்படுத்தும் விகிதம் அதிகமாக உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.
* ஒலிம்பிக் நடத்த விரும்பும் நாடுகள் உட்கட்டமைப்பு பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. சர்வதேச அரங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் (2024 பாரிஸ் ஒலிம்பிக், 6 பதக்கம், 71வது இடம்).
தவிர, ஒலிம்பிக் நடத்தும் இடத்தை தேர்வு செய்யும் பணிகளை ஐ.ஒ.ஏ., தற்காலிகமாக நிறுத்தி வைத்தது, இந்தியாவுக்கு பின்னடைவாக அமையலாம்.
இந்திய தரப்பில் கூறுகையில்,'' ஐ.ஒ.சி.,யின் முடிவு நல்லது தான். இதனால், எங்கள் தரப்பில் தேவையான மாற்றம் செய்ய கால அவகாசம் கிடைத்துள்ளது. இவற்றை விரைவில் சரி செய்து, ஒலிம்பிக் நடத்தும் தகுதி உள்ளது என்பதை நிரூபிப்போம்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement