தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிப்பதை கண்டித்து, திருச்செங்கோடு அண்ணா சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மத்திய அரசு விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், மாவட்ட துணை தலைவர் பூபதி, மாநில கரும்பு விவசாயிகள் சங்க துணை தலைவர் நல்லாக்கவுண்டர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி, திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் பூபதி ஆகியோர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.