பருவமழையை எதிர்கொள்ள உயிரியல் பூங்காவில் ஏற்பாடு

புதுடில்லி: தேசிய தலைநகர் பிராந்தியத்தில் துவங்கியுள்ள பருவமழையை எதிர்கொள்ள, தேசிய உயிரியல் பூங்காவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

டில்லி புறநகரில், 176 ஏக்கரில் அமைந்துள்ள தேசிய உயிரியல் பூங்காவில், 95 வகையான, 1,100 விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பூங்காவின் பல இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

மின்சார டிரான்ஸ்பார்மருக்குள் மழைநீர் புகுந்தது. அதேபோல, விலங்குகள் அடைக்கப்பட்டிருந்த பல இடங்களில் வெள்ளம் தேங்கியது. இந்த ஆண்டு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டைப் போல பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

உயிரியல் பூங்கா இயக்குனர் சஞ்சீத்குமார் கூறியதாவது:

பூங்காவில், மோட்டார் பம்ப்களும் ஆய்வு செய்யப்பட்டு, பழுது நீக்கப்பட்டுள்ளன. வெள்ளம் தேங்கும் என கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதல் பம்ப் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 24 மணி நேரமும் துண்டிக்கப்படாத மின்சப்ளைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மான்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளின் கூரைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பலத்த மழை பெய்தாலும் விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

உள்கட்டமைப்பு பணிகள் மட்டுமின்றி, பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றி, விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காயங்களுக்கு மஞ்சள், வேப்பெண்ணெய் பூசுவதன் வாயிலாக மழை நாட்களில் விலங்குகளை பத்திரமாக பராமரிக்கலாம்.

அதேபோல, பணியாளர்களுக்கு தேவையான பூட்ஸ், குடை, மழை பாதுகாப்பு உடைகள் ஆகியவையும் தேவையான அளவுக்கு வாங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement