உத்தராகண்ட்டில் கனமழை இரு விமானப்படை வீரர்கள் பலி

டேராடூன்: உத்தராகண்ட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், நம் விமானப்படை வீரர்கள் இரண்டு பேர் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஹரித்வார், ருத்ரபிரயாக், உத்தரகாசி உள்பட, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

ஹரித்வாரில் உள்ள கங்கை, சாமோலியில் உள்ள அலக்நந்தா, உத்தரகாசியில் உள்ள பாகீரதி, பித்தோராகர் மாவட்டத்தில் சரயு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகள் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் கரையோரம் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மேலும் நிலச்சரிவுகளால் மாநிலம் முழுதும் 100க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.

சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் இடையே நிலச்சரிவு காரணமாக, கேதார்நாத்துக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

சிலாய் பகுதியில், கட்டுமானத் தொழிலாளர்களின் தங்குமிடம் மீது நிலச்சரிவு ஏற்பட்டதில், ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டையைச் சேர்ந்த பிரின்ஸ் யாதவ், 22, பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த சாஹில் குமார், 23, உட்பட எட்டு விமானப் படை வீரர்கள், நான்கு பெண்களுடன் நைனிடாலுக்கு விடுமுறைக்காகச் சென்றனர்.

அப்போது, பீம்தாலில் உள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது, பிரின்ஸ் மற்றும் சாஹில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் தாம் உட்பட, பேரிடர் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் நிலைமை குறித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்தார்.

Advertisement