அரசு தோட்டக்கலை பண்ணையில் பூ, பழம், மருத்துவ செடி விற்பனை

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை, அரசு தோட்டக்கலை பண்ணையில் பூ, பழம், மருத்துவ செடி மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மொத்தம், 5.32 ஏக்கர்பரப்பளவில் அமைந்துள்ள பண்ணையில் மிளகாய், கத்திரி குழித்தட்டு நாற்றுகள், சீத்தா, எலுமிச்சை போன்ற பழச்செடிகள், பூச்செடிகள், மருத்துவம் மற்றும் அலங்கார செடிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து அரசு தோட்டக்கலை துறை அலுவலர் கூறியதாவது:

பழ வகைகளில் சீத்தா, நாவல், பப்பாளி போன்றவையும், பூ வகைகளில் மல்லிகை, செம்பருத்தி, காக்கட்டான் செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வீட்டு அலங்காரத்திற்கு மணி பிளான்ட், ஸ்பைடர் லில்லி, அரேலியா, பட்டு ரோஸ், செம்பருத்தி மற்றும் வல்லாரை, திப்பிலி, துாதுவளை, பிரண்டை, கோலியாஸ், ஆடாதோடா போன்ற மருத்துவ செடிகளும் விற்பனைக்கு தயாராக உள்ளன.

அனைத்து நாற்றுகளும் தலா 15 ரூபாய்க்கு கிடைக்கும்.

மேலும் தேக்கு, எலுமிச்சை, வேம்பு போன்ற மரக்கன்றுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. செடிகள் மற்றும் நாற்றுகள் தேவைப்படுவோர், நேரடியாக இங்கு வந்து, தேவையான செடிகளை பெற்றுச் செல்லலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement