இரவு பகல் பாராமல் 'லேப்டாப்' பயன்படுத்துவதால் ஆண்களுக்கு பாதிப்பு: டாக்டர் காமராஜ் எச்சரிக்கை

4


சென்னை: உலக பாலியல் சங்கத்தின் முக்கிய அங்கமான, 'ஏசியா ஓசியானியா பெடரேஷன் ஆப் செக்சாலஜி' அமைப்பின் துணைத்தலைவராக பாலியல் நிபுணர் டாக்டர் காமராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

பாலியல் நலம், பாலியல் உரிமைகள், பாலியல் நீதி போன்றவற்றை மக்களின் அடிப்படை வாழ்வியல் தேவைகளாக, உரிமைகளாக கருதி மக்களுக்கு சேவை செய்ய இந்த அமைப்பு செயல்படுகிறது. டாக்டர் காமராஜ், சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: பாலியல் நலம் என்பது, பால் உறுப்புகள் மற்றும் பாலியல் நடவடிக்கை தொடர்பான ஆரோக்கியம் பற்றியதாகும்.



பாலுறவு மூலம் பரவும் நோய்கள் தடுப்பு, தேவையற்ற கருவுறுதல், பாலுறவு சார்ந்து எடுக்கும் முடிவுகளில் அதிக கட்டுப்பாடு போன்றவையும் பாலியல் நலத்தில் அடங்கும். உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றுடன் பாலியல் நலத்தையும் மனிதனுக்கு அடிப்படை தேவையாக சேர்க்க வேண்டும். எல்லாருக்கும் பாலியல் நலம் முக்கியம்.


அத்துடன் பாலியல் ரீதியான வன்முறை, கொடுமைகளை தடுப்பதும் முக்கியம். ஆன்லைன் வசதிகள் அதிகரித்து விட்டதால், ஆபாச படங்கள் பார்ப்பது அதிகரித்து விட்டது. இதனால், தேவையற்ற பாலியல் ரீதியான குழப்பங்கள், பிரச்னைகள், சிக்கல்கள், சுரண்டல்கள் ஏற்படுகின்றன.


விழிப்புணர்வு



ஆபாச படங்களுக்கு அடிமையாகும் ஆண்களுக்கு, ஆண்மைக்குறைவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, கொரோனா பரவலுக்கு பின், ஆண்களின் விந்தணு எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது, எதிர்கால மனித சமூகத்துக்கு சவாலாக அமையலாம்.



இரவு, பகல் வித்தியாசம் இல்லாமல் மணிக்கணக்கில் லேப்டாப்பில் வேலை செய்யும் இளைஞர்கள் அதிகம். இதனால், ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படலாம் என்பது குறித்து, எங்களை போன்ற பாலியல் டாக்டர்கள் தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

போதைப்பொருள் பழக்கம்



இறுக்கமான ஆடைகள், காற்றோட்டம் இல்லாத உடைகள், ஆண்களுக்கு நல்லதல்ல. அதிக வெப்பம் மிகுந்த இடங்களில் பணியாற்றும் ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.



அதேபோல, போதைப்பொருள் பழக்கமும் சமூக சிக்கலாக மாறி வருகிறது. போதைப் பொருட்கள் இல்லாத சமூகம், பாலியல் விழிப்புணர்வு அடைந்த நாகரிகமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உலக பாலியல் சங்கம் சார்பில் டாக்டர் ஜெயராணி கூறுகையில், ''பாலியல் கல்வி என்பது அசிங்கமானது என்று, பலரும் தவறாக நினைக்கின்றனர். ''நம் கலாசாரத்துக்கு ஏற்ற மாதிரியும், அந்தந்த வயதுக்கு ஏற்ற மாதிரியும் வாழ்வியல், ஆரோக்கிய கல்வியை உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தயாரித்துள்ளன.



''இந்த மாதிரியான கல்வியை சில நாடுகளில் அமல்படுத்தி உள்ளதால், அங்கு பாலியல் தொடர்பான குற்றங்கள் குறைந்துள்ளன. எனவே, நம் நாட்டிலும் நம் கலாசாரத்துக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ள பாலியல் கல்வியை, மத்திய - மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement