வரிகளை குறையுங்க - கவுன்சிலர்கள் குறைப்பு செய்ய முடியாது - கமிஷனர் திண்டுக்கல்  மாநகராட்சி கூட்டத்தில் விவாதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் வணிகநிறுவனங்கள், வீடுகளுக்கு வரிகுறைப்பு செய்ய சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என கூற வரியை குறைக்க முடியாது என மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் மேயர் இளமதி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை மேயர் ராஜப்பா (தி.மு.க.,) முன்னிலை வகித்தார். கமிஷனர் செந்தில்முருகன் வரவேற்றார். கூட்டம் தொடங்கியதும் தனது வார்டில் நடைபெறும் நலத்திட்ட விழாக்களில் தன்னை அதிகாரிகள் புறக்கணிப்பதாக கூறி காங். கவுன்சிலர் கார்த்திக் வெளிநடப்பு செய்தார்.

கவுன்சிலர்கள் விவாதம்



பாஸ்கரன் (அ.தி.மு.க., ): எனது வார்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. சாக்கடை கட்டுதல் உட்பட எந்த பணியும்( கண்டன போஸ்டரை காண்பித்தப்படி) நடக்கவில்லை.

மேயர் : நிதி நிலைமைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டு பணிகள் செய்யப்படும்.மாரியம்மாள் (கம்யூ., ): அங்கன்வாடி கட்டவும், மராமத்து செய்யவும் நிதி ஒதுக்கவில்லை.ஜெயந்தி (தி.மு.க., ): தேவாலயம் அருகில் அமைக்கப்பட இருந்த உயர்கோபுர மின்விளக்கு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

துணை மேயர் : தேவாலயத்தின் அருகில் கால்நடை ஆஸ்பத்திரி சாலை உட்பட 3 சாலைகள் சந்திப்பு பகுதி உள்ளது. எனவே பவுண்டரி அடிப்படையில் ஹைமாஸ் விளக்கு அங்கு அமைக்கப்படுகிறது.

தனபாலன் (பா.ஜ., ): எனது வார்டில் பாதாள சாக்கடை மோசமாக உள்ளது. மாநகராட்சி ஸ்டேசனரி பொருட்கள் வாங்கியதாக ஒவ்வொரு கூட்டத்திலும் லட்சக்கணக்கில் பில் வைக்கப்படுகிறது.

அதை ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். மாநகராட்சி கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறது. சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களுக்கு 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

துணைமேயர்: பாதாள சாக்கடை குழாய்கள் சரியான ஆழத்தில் அமைக்கப்படவில்லை. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கமிஷனர் : வேலைக்கான உத்தரவு இல்லாமல் எந்த பணியும் துவங்கக்கூடாது என்பது விதி. பழைய சுத்திகரிப்பு நிலையத்தையும், புதிய சுத்திகரிப்பு நிலைய கட்டமைப்புகளையும் ஒன்றினைக்க ரூ.96கோடியில் திட்டம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பட்டுள்ளது.

ஜோதிபாசு (கம்யூ.,): நத்தம் சாலை, நாகல்நகர் மேம்பாலம், பேகம்பூர் உட்ட பல பகுதிகளில் தெருவிளக்கு வசதி முறையாக இல்லை.

துணை மேயர்: தி.மு.க.,ஆட்சியில்தான் டியூப்லைட்டுகள் அனைத்தும் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்பட்டன. 7800 விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் விளக்குகள் பொருத்தப்படும்.

கணேசன் (கம்யூ.,): மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் அனைத்து வார்டுகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் ஹவுசிங் போர்டு தொகுப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை. அதை விரைவில் வழங்க வேண்டும். 3 லட்சம் மக்கள்தொகை கூட இல்லாத திண்டுக்கல்லில் சொத்து வரி அதிகமாக உள்ளது. அதை குறைக்க சிறப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

பவுமிதா பர்வீன் (தி.மு.க.,): குயவர் சந்தில் சாலை வசதி இல்லை. இந்த பணியை செய்து தர முடியுமா என்பதை தெரிவிக்கவேண்டும்.

பானுப்பிரியா (தி.மு.க.,): குடிநீர் இணைப்பு இல்லை. போர்வெல், பொது கழிப்பறை , சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவேண்டும்.

செந்தில்குமார் (தி.மு.க.,):- பிரதான சாலையில் வணிகம் செய்பவருக்கும், குறுகிய தெருக்களில் வணிகம் செய்பவருக்கும் ஒரே மாதிரி வரிவிதிப்பது சரியில்லை. குடியிருப்பு பகுதிக்கு ஏற்ப வணிகநிறுவனங்களுக்கு வரியை மாற்றியமைக்க வேண்டும்.

முகமது இலியாஸ் (இ.யூ.மு.லீக்.,): சென்னை போல் திண்டுக்கல்லில் வரி விதிக்கப்படுகிறது. சென்னைக்கு இணையான வசதிகளை செய்துவிட்டு பின்னர் அதிகவரி வசூலிக்கலாம். அதுவரை வரியை குறைவாக வசூலிக்க வேண்டும்.

கமிஷனர்: வரி நிர்ணயம் தன்னிச்சையான முடிவு அல்ல. அரசின் கொள்கை முடிவுக்குட்பட்டது.

நில மதிப்புக்கு ஏற்ப வரியை முடிவு செய்து மன்றத்தின் ஒப்புதல் பெற்றுதான் வரி தீர்மானிக்கப்படுகிறது. அதை குறைக்க முடியாது.

ஜான்பீட்டர் (தி.மு.க., ): தஞ்சை மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்கள், 4 வகை ஸோன்களாக பிரிக்கப்பட்டு திண்டுக்கல்லை விடவும் குறைவானன வரி வசூலிக்கப்படுகிறது. இங்கு வசூலிக்கப்படும் அதிகப்பட்ச வரியால் வணிகர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

துணை மேயர்: வரியை குறைக்க முடியாவிட்டால் மண்டலத்தை பிரித்து வரிவகைப்பாட்டை மாற்றியமைக்க வேண்டும்.

மேயர்: வணிகர்கள் வரியை குறைக்கும்படி மனு கொடுத்துள்ளனர். பழைய வரி பாக்கியை வசூலிக்க வேண்டும். இதற்காக சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.

அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை தர வேண்டும் என்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement