கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

பாகூர், : கிருமாம்பாக்கத்தில் கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்து, 7 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். கிருமாம்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் கத்தியை வைத்து கொண்டு பொது மக்களை மிரட்டி வருவதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், பிச்சைவீரன்பேட் பகுதியை சேர்ந்த மிட்டாய் மணி (எ) மணிகண்டன், 18, என்பதும் இவர், தனது கூட்டாளிகளான கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ரவுடி புகழ் (எ) புகழேந்தி, 28; கடலுார் செல்வக்குமார் ஆகியோருடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கிருமாம்பாக்கத்தை சேர்ந்த ஜார்ஜ் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மணிகண்டன் அளித்த தகவலின் பேரில், புகழ் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகழ், செல்வக்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement