டிரம்ப் விதித்த காலக்கெடு: ஜோதிடம் சொல்கிறார் ராகுல்!

12


புதுடில்லி: டிரம்ப் விதித்த காலக்கெடுவை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வார் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்துள்ளார்.


கடந்த வாரம், விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.


அன்னிய முதலீடுகளை அனுமதிக்காமல் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் விவசாயம், பால்வளம் ஆகியவற்றில் சந்தையை திறந்துவிட அமெரிக்கா கோரி வருகிறது. இதை, இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.


இது தொடர்பாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ''குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டும் என்ற அவசரத்தில் இந்தியா செயல்படவில்லை. இரு நாடுகளும் பலன்பெறும் வகையில் முடிவுகள் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வோம்'' என கூறியிருந்தார்.


இந்நிலையில், ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எனது வார்த்தையை கவனியுங்கள். டிரம்ப் விதித்த காலக்கெடுவை மோடி ஏற்றுக் கொள்வார்''.

இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


ஏப்ரல் 2ம் தேதி பரஸ்பர வரிகளை அதிபர் டிரம்ப் அறிவித்தார். பின்னர் 90 நாட்களுக்கு அந்த வரிகளை நிறுத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement