இதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு; 12 நாடுகளுக்கான புதிய வரி விதிப்பு கடிதத்தில் டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: 12 நாடுகளுக்கு புதிய வரியை விதித்து எழுதப்பட்ட கடிதங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த வரி விதிப்பை ஏற்றுக் கொள்வது என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் கைவிடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற உடன், பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை பலமடங்கு உயர்த்தினார். இதற்கு கடும் அதிருப்தி நிலவியதால், 90 நாட்களுக்கு தற்காலிகமாக வரி உயர்வை நிறுத்திவைத்த அதிபர் டிரம்ப், இந்த காலகெடு முடிவதற்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, பிரிட்டன் உடனான ஒப்பந்தம் மட்டுமே இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் ஐரோப்பா நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தக் காலக்கெடு ஜூலை 9ல் முடிவடைய உள்ளதால், பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் மேற்கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், நியூ ஜெர்சி மாகாணத்திற்கு புறப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், 12 நாடுகளுக்கான புதிய வரிவிதிப்புக்கான கடிதங்களில் கையெழுத்திட்டு விட்டதாக கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், "12 நாடுகளின் பெயர்கள் திங்கட்கிழமை வெளியிடப்படும். அன்றைய தினம் அந்தந்த நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு விடும். இதை ஏற்றுக் கொள்வது என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் கைவிட்டு விடுங்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு 70 சதவீதம் வரையில் வரிவிதிப்பு இருக்கும். ஆக.,1 முதல் இந்த புதிய வரி அமலுக்கு வரும்," என்றார்.