இந்திய பெண்கள் வரலாறு * ஆசிய கால்பந்து தொடருக்கு தகுதி

சியாங் மாய்: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய பெண்கள் அணி முதல் முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் ஆஸ்திரேலியாவில் (12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என 4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கிறது.
இந்திய அணி 'பி' பிரிவில் தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்-லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றது. முதல் 3 போட்டியில் மங்கோலியா (13-0), திமோர்-லெஸ்தே (4-0), ஈராக்கை (5-0) வென்றது. நேற்று இந்தியா (9 புள்ளி) தனது கடைசி போட்டியில் தாய்லாந்தை (9) சந்தித்தது. இரு அணிகளும் சம புள்ளிடன் இருந்தன. வெல்லும் அணி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் என்ற நிலையில், 29 வது நிமிடத்தில் சங்கிதா ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில் தாய்லாந்தின் சட்சவான் (48) கோல் அடிக்க, ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. 74வது நிமிடம் சங்கிதா மீண்டும் கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
'பி' பிரிவில் இந்தியா 12 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, தகுதிச்சுற்றில் சாதித்து, முதன் முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

22 ஆண்டுக்குப் பின்...
கடந்த 1975 முதல் பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடர் நடக்கிறது. 1980, 1983 என இரு முறை பைனலுக்கு முன்னேறிய இந்தியா, 2வது இடம் பிடித்தது. கடைசியாக 2003ல் 9வது இடம் பெற்றது.
இதன் பின் தகுதிச்சுற்று அறிமுகம் ஆனது. 2022ல் சொந்தமண்ணில் தொடரை நடத்தியதால், இந்திய பெண்கள் அணி ஆசிய கோப்பையில் பங்கேற்றது. தற்போது முதன் முறையாக தகுதிச்சுற்றில் சாதித்து, ஆசிய கோப்பையில் பங்கேற்க உள்ளது.

Advertisement