சுப்மன் கில் மீண்டும் 'சூப்பர்' சதம்: இந்திய அணி ஆதிக்கம்

பர்மிங்ஹாம்:பர்மிங்ஹாம் டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கேப்டன் சுப்மன் கில் மீண்டும் சதம் விளாசினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமின், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 64/1 ரன் எடுத்திருந்தது.
கில் அபாரம்: நான்காம் நாள் ஆட்டத்தில் கருண் நாயர் (26) சோபிக்கவில்லை. நிதானமாக ஆடிய ராகுல் (55) அரைசதம் கடந்தார். பின் இணைந்த ரிஷாப் பன்ட், கேப்டன் சுப்மன் கில் ஜோடி நம்பிக்கை தந்தது. டங் வீசிய 40வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார் கில். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பன்ட், 48 பந்தில் அரைசதம் விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது பஷிர் 'சுழலில்' பன்ட் (65) சிக்கினார். சுப்மன் கில், தனது 8வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். ரூட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரவிந்திர ஜடேஜா, அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய சுப்மன் கில், ரூட் பந்தை சிக்சருக்கு அனுப்பி 150 ரன்னை எட்டினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 175 ரன் சேர்த்த போது பஷிர் பந்தில் கில் (161) அவுட்டானார். இந்திய அணி 2வது இன்னிங்சில் 427/6 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. ஜடேஜா (69), வாஷிங்டன் சுந்தர் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.


கடின இலக்கு: பின் 608 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 7 ஓவரில் 43/2 ரன் எடுத்து திணறியது. போப் (15), ரூட் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சிராஜ், ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



@quote@

'சேஸ்' செய்ய முடியுமா


இங்கிலாந்தின் வெற்றிக்கு 608 ரன் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 418 ரன் (வெஸ்ட் இண்டீஸ், எதிர்: ஆஸி., 2003, இடம்: ஆன்டிகுவா) மட்டுமே 'சேஸ்' செய்யப்பட்டது. கடந்த 2022ல் பர்மிங்ஹாமில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 378 ரன்னை விரட்டியது இங்கிலாந்தின் சிறந்த 'சேஸ்' வெற்றியாக உள்ளது.quote

சிக்சர் மன்னன்
இங்கிலாந்து மண்ணில் அதிக சிக்சர் விளாசிய அன்னிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் ரிஷாப் பன்ட் (23 சிக்சர்) முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (17 சிக்சர்), வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (16) உள்ளனர்.

கோலியை முந்தினார்
கேப்டனாக அறிமுகமான முதல் டெஸ்ட் தொடரில், அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார் சுப்மன் கில். இதுவரை 4 இன்னிங்சில், 519* ரன் குவித்துள்ளார். இதற்கு முன், விராத் கோலி 449 ரன் (எதிர்: ஆஸி., 2014-15) எடுத்திருந்தார்.

சச்சின், டிராவிட் வழியில்...
பர்மிங்ஹாம் டெஸ்டில் இந்தியாவின் சுப்மன் கில்-ஜடேஜா (203 ரன்), சுப்மன்-வாஷிங்டன் சுந்தர் (144), சுப்மன்-ரிஷாப் பன்ட் (110) ஜோடி தலா 100 ரன்களுக்கு மேல் சேர்த்தன. அன்னிய மண்ணில் விளையாடிய ஒரு டெஸ்டில், மூன்று முறை 100 அல்லது அதற்கு மேல் 'பார்ட்னர்ஷிப்' அமைத்த 3வது இந்திய வீரரானார் சுப்மன். ஏற்கனவே டிராவிட் (1998-99, எதிர்: நியூசி., இடம்: ஹாமில்டன்), சச்சின் (2004, எதிர்: ஆஸி., இடம்: சிட்னி) இப்படி சாதித்திருந்தனர்.
* இங்கிலாந்துக்கு எதிராக இப்படி சாதித்த 2வது இந்திய வீரரானார் சுப்மன். ஏற்கனவே சென்னை டெஸ்டில் (2016) கருண் நாயர் இப்படி அசத்தினார்.

கவாஸ்கர் சாதனை முறியடிப்பு
பர்மிங்ஹாமில் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சேர்த்து சுப்மன் கில், 359* ரன் (269+90*) குவித்தார். ஒரு டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சேர்த்து அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் சுப்மன் கில். இதற்கு முன், கவாஸ்கர் 344 ரன் (1971, எதிர்: வெஸ்ட் இண்டீஸ், இடம்: போர்ட் ஆப் ஸ்பெயின்) எடுத்தது அதிகமாக இருந்தது.
* 'சேனா' நாடுகளுக்கு (தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) எதிராக, ஒரு டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சேர்த்து 300 ரன்களுக்கு மேல் குவித்த 3வது ஆசிய வீரரானார் சுப்மன். ஏற்கனவே இந்தியாவின் டிராவிட் (305 ரன், எதிர்: ஆஸி., இடம்: அடிலெய்டு, 2003-04), சச்சின் (301 ரன், எதிர்: ஆஸி., இடம்: சிட்னி, 2003-04) இப்படி ரன் மழை பொழிந்தனர்.

ஒன்பதாவது வீரர்
டெஸ்ட் அரங்கில், ஒரு போட்டியில் இரட்டை சதம், சதம் விளாசிய 9வது வீரரானார் சுப்மன் கில். இப்படி சாதித்த 2வது இந்திய வீரரானார். ஏற்கனவே இந்தியாவின் கவாஸ்கர் (1971, எதிர்: வெஸ்ட் இண்டீஸ், இடம்: போர்ட் ஆப் ஸ்பெயின்) இப்படி சாதித்திருந்தார்.
* ஒரு டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய 3வது இந்திய கேப்டன் ஆனார் சுப்மன் கில். ஏற்கனவே கவாஸ்கர் (1971, எதிர்: வெஸ்ட் இண்டீஸ், இடம்: போர்ட் ஆப் ஸ்பெயின்), கோலி (2014, எதிர்: ஆஸி., இடம்: அடிலெய்டு) இப்படி அசத்தினர்.

மூன்று சதம்
லீட்ஸ் டெஸ்டில் (147) சதமடித்த சுப்மன் கில், பர்மிங்ஹாமில் இரட்டை சதம் (269), சதம் (100*) என அசத்தினார். கேப்டனாக களமிறங்கிய முதலிரண்டு டெஸ்டில், 3 சதம் விளாசிய 2வது வீரரானார் சுப்மன். ஏற்கனவே கோலி, இப்படி சதமடித்திருந்தார். இந்தியாவின் விஜய் ஹசாரே, கவாஸ்கர், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இலங்கையின் தனஞ்செயா டி சில்வா உள்ளிட்ட 7 பேர், கேப்டனாக களமிறங்கிய முதலிரண்டு டெஸ்டில் தலா 2 சதம் அடித்திருந்தனர்.

Advertisement