கடலுாரில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் மீட்கும் பணி துவக்கம்

கடலுார் : கடலுார் கூத்தப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள தேவநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கும் பணிகளை அறநிலைறத்துறை அதிகாரிகள் துவக்கினர்.

கடலுார் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலம் கூத்தப்பாக்கத்தில் உள்ளது. உள்ளது. அதில் 3.40 ஏக்கர் பரப்பை, தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை மீட்க வேண்டும் என பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே, 2019ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து அறநிலையத்துறையினர் நேற்று அங்கு சுற்றுச்சுவரை இடித்து மனுதாரர் முன்னிலையில் துாய்மைப்படுத்தும் பணியை துவக்கினர்.

இதுகுறித்து வினோத் ராகவேந்திரன் கூறுகையில், '2024ல் நான் தொடர்ந்த வழக்கில் பெறப்பட்ட உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாததையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து தற்போது அவசர கதியில் பணிகள் நடக்கிறது. அதுவும் இன்னும் முழுமையாக முடியவில்லை. இடத்தை அளந்து முழுமையாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்' என்றார்.

Advertisement