இந்தியாவில் முதன்முறையாக மதுரையில் நாட்டு இன நாய்களுக்கான கண்காட்சி போட்டி ராஜபாளையம் ரக நாய்களுக்கு அங்கீகாரம் பெற முயற்சி

மதுரை:நாட்டு இன நாய்களுக்கான பிரத்யேக சங்கத்தின் தமிழ்நாடு கிளையான மதுரை கெனைன் கிளப் சார்பில், இந்தியாவில் முதன் முறையாக மதுரையில் இந்திய நாட்டு இன நாய்களுக்கான பிரத்யேக கண்காட்சி போட்டி நடந்தது.

தமிழகத்தின் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை இன நாய்கள், ஆந்திராவின் பாஷ்மி, கர்நாடகாவின் முதால் ஹவுண்டு, மஹாராஷ்டிராவின் கேரவன் ஹவுண்டு, உத்தர பிரதேசத்தின் ராம்பூர் ஹவுண்டு என இந்தியாவில் உள்ள எட்டு வகையைச் சேர்ந்த 269 நாய்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.

பப்பி, ஜூனியர், அடல்ட் வகையின் கீழ், மூன்று நிலைகளில் நாய்களின் இனத்திற்கேற்ற உடல், பற்கள் அமைப்பு, கால் பாதம், நடை, வால் ஆகியவற்றை வைத்து சிறந்த நாய்களை சர்வதேச நடுவர் சுதர்சன் தேர்வு செய்தார்.

கண்காட்சியின் நோக்கம் குறித்து தமிழ்நாடு கிளை செயலர் பிரவீன், துணைத்தலைவர் பாலமுருகன் கூறியதாவது:

தமிழக, இந்திய நாட்டுஇன நாய்களை சர்வதேச அங்கீகாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சியை நடத்துகிறோம். சர்வதேச அளவில் டாபர்மேன், ராட்வீலர், லேப்ரடார் போன்ற சர்வதேச நாய்களை இந்தியாவில் அங்கீகரிக்கிறோம்.

நம் நாய்களுக்கு சர்வதேச அளவில் இதுவரை அங்கீகாரம் கிடைக்கவில்லை. முதல்கட்டமாக ராஜபாளையம் ரகத்தைச் சேர்ந்த, 70 நாய்களை தேர்வு செய்து, அவற்றின் டி.என்.ஏ., மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.

இதன் மூலம் அவற்றின் சிறப்புகளை எடுத்துரைத்து, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறச் செய்வதே நோக்கம்.

இந்தியாவிலும் சிறப்பு வாய்ந்த நாய்கள் உள்ளதென வெளிநாட்டவரும் தெரிந்து, அவற்றை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கண்காட்சியில், மிகச்சிறந்த எட்டு நாய்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை கெனைன் கிளப் சார்பில் அனைத்து நாய்களுக்கான 39, 40வது நாய் கண்காட்சி இன்று தமுக்கம் மைதானத்தில் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.

Advertisement