ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு

3

ராயச்சோட்டி: தமிழகத்தில் 1995 முதல் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயங்கரவாதிகளால் குறி வைத்து கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் மற்றும் நெல்லையைச் சேர்ந்த முஹமது அலி ஆகியோர் தலைமறைவாகினர்.


மதுரையில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரையின் போது பைப் குண்டு வெடிக்கச் செய்தது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மீது குண்டு வீசியது உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் இவர்கள் இருவருக்கும் நேரடி தொடர்புள்ளது.நாட்டின் பல்வேறு மாநிலங்களில், இவர்கள் மாறி மாறி மறைந்து வாழ்வது தெரியவந்ததை அடுத்து, இருவரையும் பிடிக்க தமிழக பயங்கரவாத தடுப்பு போலீசார் தனிப்படை அமைத்தனர். இந்நிலையில், ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி என்ற இடத்தில், அபுபக்கர் சித்திக் மற்றும் முஹமது அலி ஆகியோரை தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஜூலை 1ம் தேதி கைது செய்தனர்.


தமிழகம் அழைத்து வரப்பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராயச்சோட்டியில் அவர்கள் இருந்த வீட்டில், ஆந்திர போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.


முக்கிய ஆவணங்கள், பென் - டிரைவ்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நாளிதழ்கள், நம் நாட்டின் முக்கிய இடங்களின் வரைபடங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


இது குறித்து கர்னூல் டி.ஐ.ஜி., கோயா ப்ரவீன் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட அபுபக்கர் சித்திக்கை முதலில் சாதாரணமானவர் என்றுதான் நினைத்தோம். தொடர் விசாரணையில், மிகவும் ஆபத்தான பயங்கரவாதி என்பது தெரியவந்துள்ளது.


வங்கதேச வெடிகுண்டு வழக்கில், நம் நாட்டில் இருந்து தப்பியோடிய மும்பையைச் சேர்ந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக விளங்கிய இஸ்லாமிய மதபோதகர் ஜாஹிர் நாயக் உடன் அபுபக்கர் சித்திக் நெருக்கமாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தலைமறைவாக இருந்த காலத்தில் பெங்களுர் மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலக குண்டுவெடிப்பிலும் இவருக்கு தொடர்பு உள்ளது.


வெடிகுண்டு, 'டைம் - பாம்' தயாரிப்பதிலும் சித்திக் தேர்ச்சி பெற்றுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement