பெட்ரோல், டீசல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து குன்றத்துார் அருகே பரபரப்பு

குன்றத்துார், குன்றத்துார் அருகே பெட்ரோல், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி தலை குப்புற கவிழ்ந்து, டீசல், பெட்ரோல் சாலையில் ஓடியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எண்ணுாரில் இருந்து, 4,000 லிட்டர் பெட்ரோல், 8,000 லிட்டர் டீசல் ஏற்றிய டேங்கர் லாரி, குன்றத்துார் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு, நேற்று மதியம் சென்றது. லாரியை, சூர்யா, 30, என்பவர் ஓட்டினார்.
குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், சிறுகளத்துார் அருகே சென்ற போது, திடீரென டேங்கர் லாரியின் பின் டயர் வெடித்ததில், லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே தலை குப்புற கவிழ்ந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், காயமடைந்த ஓட்டுனரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து, சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், டேங்கர் லாரியிலிருந்து பெட்ரோல், டீசல் கசிந்து கொண்டே இருந்ததால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, டேங்கர் லாரியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்துக்கொண்டே இருந்தனர். பின், ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, லாரியை அப்புறப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, பாதுகாப்பான முறையில், டேங்கர் லாரி துாக்கி நிறுத்தப்பட்டது.
இருப்பினும், தீ விபத்து ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து தண்ணீர் மற்றும் ரசாயனம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இச்சம்பவத்தால், அச்சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்
-
வியூகத்தை மாற்றிய குருவிகள் புது ரூட்டில் வருகிறது தங்கம்
-
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம் எம்.எல்.ஏ., பங்கேற்பு