டிஸ்குடன் லாரி டயர் திருட்டு சிக்கிய நாமக்கல் டிரைவர்

நாமக்கல், நாமக்கல் அண்ணாநகரை சேர்ந்தவர் லோகநாதன், 42; இவர், லாரி பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி, கடந்த மாதம், 3ல், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.

இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆய்வுக்கு உட்படுத்திவிட்டு, நாமக்கல் வள்ளிபுரத்தில் தனது பட்டறை முன் நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில் லாரியில் இருந்த நான்கு டயர்களையும், டிஸ்குடன் மர்ம ஆசாமி திருடி சென்றார். கடந்த, 29ல் வள்ளிபுரத்தில் மற்றொரு பார்க்கிங்கில் தன் லாரியை நிறுத்த லோகநாதன் சென்றார். அங்கு நிறுத்தியிருந்த லாரி ஒன்றில், தன் லாரியில் திருட்டு போன, மூன்று டயர்கள் மாட்டப்பட்டிருந்ததை, டிஸ்கை கொண்டு அடையாளம் கண்டார்.
இதுகுறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் அளித்த புகார்படி, போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் நாமக்கல் திண்டமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சின்னராஜா, 37, என்பவர், லோகநாதனின் லாரி டயர்களை திருடி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement