ஆன்மிக நிகழ்வுகளில் யானைகளுக்கு கட்டுப்பாடு: ஆன்மிகவாதிகள் வேதனை

7

மயிலாடுதுறை: ஆன்மிக நிகழ்வுகளில் யானைகளை பங்கேற்க செய்ய வனத்துறை கட்டுப்பாடு விதிப்பதால் ஆன்மிகவாதிகள் வேதனை அடைந்துள்ளனர்.


யானை, உருவத்தில் பெரிதாக இருந்தாலும் பழக எளிமையாக இருக்கும். முன்பெல்லாம் யானை வீதிகளில் வரும்போது, மக்கள் அரிசி, வாழைப்பழம், தென்னை மட்டைகள் வழங்கி, ஆசி பெறுவது வழக்கம். கடவுளுக்கு இணையாக, அவற்றை போற்றி வழிபடுவர்.



ஸ்ரீரங்கம் மற்றும் கோவில்களில் கருவறையை திறக்கும் போது, சுவாமியை முதலில் யானை வணங்கும். யானைகள் புனித நீர் எடுத்து வரும் கைங்கரியத்தில் ஈடுபட செய்வதுடன், கஜ பூஜை செய்து போற்றி வணங்குகிறோம்.


மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட கோவில்களில், 15க்கும் மேற்பட்ட
யானைகள் இருந்தன. தற்போது, நான்கு யானைகள் மட்டுமே உள்ளன. கோவில் யாக சாலை பூஜைக்கான புனித நீரை யானை மீது வைத்து வருவது, சுவாமி விக்ரகங்களை யானை மீது எழுந்தருள செய்து வீதி உலா வருவது, கஜ பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

பல கோவில்களில், யானைகளை முன்னிறுத்தியே திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. யானை இல்லாத கோவில்களுக்கு அருகாமையில் உள்ள கோவில்கள் அல்லது தனியார் யானைகளை கொண்டு வருவர்.



யானைகளை ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்க செய்ய வனத்துறை அனுமதி பெற வேண்டும். முன்பெல்லாம் எளிதாக வழங்கப்பட்டு வந்த அனுமதி, தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகே வழங்கப்படுகிறது. இதனால் ஆன்மிக நிகழ்ச்சிகளில் யானைகள் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


திருவாரூர் பறவை நாச்சியார் சமேத சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, யாகசாலை பூஜைக்காக புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சிக்கு யானை கொண்டு வர, வனத்துறை அனுமதி கிடைக்காததால், நேற்று முன்தினம், யானை வாகனத்தில் புனித நீர் எடுத்து வந்தனர்.


வன உயிரின பாதுகாப்பு என, நம் கலாசாரத்தை, இறை நம்பிக்கையை அழிக்கும் நோக்கில் வனத்துறை செயல்படுவதாக, ஆன்மிகவாதிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


கோவில் வழிபாடு மற்றும் ஆன்மிக நிகழ்வுகளில் யானை முக்கியத்துவம் பெறுகிறது என்பதால், வனத்துறையும், தமிழக அரசும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பழைய முறைப்படி யானைகளை பாதுகாப்புடன் உரிய நேரத்தில் ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்க செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Advertisement