காலியான கல்லுாரி பணியிடங்கள்; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: சாடிய அன்புமணி

2

சென்னை: அரசு கல்லுாரிகளில் காலியான முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 96 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் நிர்வாகமும், கல்வித்தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயிலும் அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்காமல் அவை சீரழிவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

இவற்றில், 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆகவும், 2024 ஜூன் மாதத்தில் 60 ஆகவும் இருந்தன.
கடந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை 90 ஆக உயர்ந்திருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் 6 பேர் ஓய்வு பெற்றதால் காலியிடங்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருந்தால், அந்த இடத்தில் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படும் மூத்த இணைப் பேராசிரியருக்கு மாதம் ரூ.40,000 வரை கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.
இதனால் மாதத்திற்கு சுமார் ரூ.38.40 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.4.60 கோடி வரை கூடுதலாக செலவு ஏற்படும். ஆனாலும், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் இருப்பதாக பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை. 4 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளுக்கு ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப் படவில்லை; இரு ஆண்டுகளாக கல்லூரி முதல்வர்களை நியமிக்கவில்லை. அப்படியானால் தமிழகத்தில் யாருக்கும் பயனில்லாத இப்படி ஓர் அரசு எதற்காக தொடர வேண்டும் என்ற வினா தான் எழுகிறது.

உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது. தமிழகத்தில் காலியாக உள்ள 96 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அதேபோல், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 9000-க்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement