'டவுட்' தனபாலு

அ.தி.மு.க.,வை சேர்ந்த, சுகாதார துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: திருப்புவனம் அஜித்குமார் மரணத்துக்கு, அவருடைய குடும்பத்தினரிடம், 'சாரி' சொல்லி சமாளிக்க பார்க்கிறார், முதல்வர் ஸ்டாலின். சாரி சொல்லிவிட்டால், போன உயிர் திரும்பி வருமா? 'தமிழகத்தின் குடிமகனை அரசே கொலை செய்துள்ளது' என, நீதிமன்றமே அரசை கண்டித்துள்ளது.

டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... கூட்டத்துல யார் காலையாவது மிதிச்சுட்டு, 'தெரியாம மிதிச்சுட்டேன் சாரி'ன்னு சொல்ற மாதிரி, ஒரு உயிரை பறிகொடுத்தவங்களிடம் போய், 'சாரி' சொன்னது, அதையும் போன்ல சொன்னது சரியா என்ற, 'டவுட்' தான் வருது!



தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: தி.மு.க., தொண்டர்களோடு பூத் கமிட்டியினர் இணைந்து வீடு வீடாக செல்கிறோம். ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து, உறுப்பினராக வேண்டும் என கேட்கிறோம். வாக்காளர்களை தி.மு.க., உறுப்பினராக்குவது அரசியல் நோக்கத்துக்காக அல்ல; தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்பதையும் அவர்களிடம் தெரிவிக்கிறோம். பலர் ஆர்வமாக தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொள்கின்றனர்.

டவுட் தனபாலு: பல இடங்களில் உறுப்பினராக சேருவோரிடம், 'அரசு நலத்திட்டங்கள்ல உங்களுக்கு முன்னுரிமை தரப்படும்'னு தி.மு.க.,வினர் சொல்றதா தகவல்கள் வருதே... ஒருவேளை அப்படி வாக்குறுதி தந்து தி.மு.க.,வுல பலரையும் சேர்த்துட்டு, 'அல்வா' குடுத்துட்டா, தேர்தல் முடிவுகள் வேற மாதிரி இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில், சட்டவிரோத விசாரணைக்கு உத்தரவிட்ட அந்த அதிகாரி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும். தமிழக போலீசார் இந்த வழக்கை விசாரித்தால், அதில் நியாயம் இருக்காதோ என்ற அச்சத்தில் தான், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியுள்ளார் தமிழக முதல்வர். -

டவுட் தனபாலு: உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் தானே, ஒட்டுமொத்த போலீஸ் துறைக்கும் தலைவர்... தன் துறையில் இருக்கிற போலீசார் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை என்றால், சாதாரண மக்கள் எந்த நம்பிக்கையில் புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷன்களுக்கு போவாங்க என்ற, 'டவுட்' வருதே!



Advertisement