திருவட்டத்துறைக்கு அரசு  பஸ் இயக்க கோரிக்கை 

திட்டக்குடி: திட்டக்குடியில் இருந்து ஆவினங்குடி வழியாக திருவட்டத்துறைக்கு அரசு டவுன் பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் 3 கி.மீ., துாரமுள்ள கொடிகளம் பஸ் நிறுத்தம் நடந்து வந்து பஸ் ஏறும் நிலை உள்ளது.

இதனால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும், இக்கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாடல் பெற்ற தலங்களில் புகழ் வாய்ந்த தீர்த்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் மாசி மகம் மட்டுமின்றி பிரதோஷம், பஞ்சமி, சஷ்டி உட்பட வார, மாத சிறப்பு பூஜைகள் விமர்சையாக இருக்கும். இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இதற்கிடையே பஸ் வசதிக் கோரி இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, திருவட்டத்துறை கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement