உண்மையான தொண்டருக்கு தலைவர் பதவி கொடுங்கள்' பா.ஜ., மேலிடத்திற்கு வைத்திலிங்கம் கோரிக்கை

மக்களுக்கு நல்ல தலைவரை கொடுங்கள் என, பா.ஜ.,விற்கு காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுச்சேரி பா.ஜ.,வின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ராமலிங்கம், காங்., கட்சியை கடுமையாக விமர்சித்தார். காங்., கட்சியில் எவ்வளவு உழைத்தாலும் உழைத்தவர்கள் முன்னுக்கு வந்ததாக சரித்திரம் இல்லை என்றார்.

அதற்கு காங்., தலைவர் வைத்திலிங்கம் பதிலளித்து கூறியதாவது:

காங்., கட்சியில் உழைத்தவர்களுக்கு என்றைக்கு தனி மரியாதை உண்டு. அவர்கள் பெரிய அளவில் வந்துள்ளனர். காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இதற்கு உதாரணம். கர்நாடகாவில் சிறிய பகுதியில் உழைத்த அவர், கடினமாக உழைத்து முன்னுக்கு வந்துள்ளார். காங்., கட்சியின் சக்தியாக உள்ளார்.

புதுச்சேரியில் உள்ள காங்., தலைவர்கள் தேர்தலை சந்தித்து மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளோம். ஆனால், புதுச்சேரி பா.ஜ., தலைவர் ராமலிங்கம் அப்படி இல்லை. அவர் தேர்தலை இதுவரை பார்க்காதவர். முன்பு மக்களையும் தேர்தலையும் பார்க்காமல் நியமன எம்.எல்.ஏ.,வாக நியமிக்கப்பட்டார். தற்போதும் தேர்தலை பார்க்காமல் தலைவராக வந்துள்ளார்.

பா.ஜ.,வில் பல ஆண்டுகளாக கட்சியில் இருந்தவர்களுக்கு தலைவராக இருக்க வாய்ப்பு தரவில்லை. கஷ்டப்பட்டவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. எட்டப்பராக இருந்து கட்சி மாறியவருக்கு பா.ஜ., தலைவராக வந்துள்ளார். பா.ஜ.,விற்கு நேரடியாகவே ஒரு கோரிக்கை வைக்கிறேன். மக்களுக்கு நம்பிக்கை தருகின்ற நல்ல தலைவரை கொடுங்கள். ஏனெனில் இவர்கள் உங்களையும் காட்டிக்கொடுத்துவிட்டு அடுத்து கட்சிக்கு தாவுவதற்கு எந்தனை காலம் ஆகும் என்பதை பா.ஜ., மேலிடம் யோசித்து பார்க்க வேண்டும்.

உங்கள் தலைவர் ராமலிங்கத்தை மறுபரீசிலனை செய்து மாற்றிவிடுங்கள். உண்மையான தொண்டருக்கு அந்த பதவியை கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement