நீலகிரி வனத்தில் வேட்டையாடிய பெண் உட்பட 5 பேர் கைது: துப்பாக்கிகள் பறிமுதல்

கோத்தகிரி;கோத்தகிரி அருகே, வனவிலங்குகளை வேட்டையாடிய பெண் உட்பட, ஐவரை கைது செய்த வனத்துறையினர், நான்கு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காட்டேஜ்களில் சமவெளி மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் சுற்றுலா வந்து, அறை எடுத்து தங்கி வருவது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு, தங்குபவர்களுக்கு சில காட்டேஜ்களில் உணவாக, மான், முயல், காட்டு பன்றி உள்ளிட்ட விலங்குகளின் இறைச்சி தாராளமாக வழங்கப்படுவதாக புகார் உள்ளது. மேலும், சில விடுதிகளில் தங்குபவர்கள், இரவு நேரத்தில் வன விலங்குகளை வேட்டையாட செல்வதும் அவ்வப்போது தொடர்ந்து வருகிறது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, நீலகிரி வன கோட்டம், கட்டபெட்டு வனச்சரகம், கெராடா மற்றும் ஆடத்தொறை பகுதியில், வாகனத்தில் வந்த ஒரு கும்பல் வன விலங்குகளை வேட்டையாடுவதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அதிகாலை கட்டபெட்டு வனசரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, துப்பாக்கிகளை வைத்து முயல் உட்பட விலங்குகளை சிலர் வேட்டையாடியது தெரியவந்தது. அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.விசாரணையில், 'கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, அக்ஷய், 28, அனுஸ்கா, 23, விக்னேஷ் நாயர், 29, ரோஹன் அட்சயா,28, மற்றும் சூரியகுமார்,27, ஆகிய ஐந்து பேர் வேட்டையில் ஈடுபட்டனர்,' என்பது தெரியவந்தது.
அவர்கள் வாகனத்தில் வைத்திருந்த நான்கு வேட்டை துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஸ்லீபர் கேமரா மற்றும் இரண்டு மான் கொம்புகள் மற்றும் ஜீப்பை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள காட்டேஜ்களில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




