ஜூலை 10ல் மேய்ச்சல் நில உரிமை மாநாடு: சீமான் அறிவிப்பு

சென்னை: ஜூலை 10ம் தேதி மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன்வைத்து மாநாடு நடைபெற உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
வருகிற 10ம் தேதி மாலை 5 மணிக்கு மதுரை விராதனூர் என்னும் இடத்தில் ஆடு- மாடுகளின் மாநாடு நடக்கவிருக்கிறது.
மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடக்கிறது. மேய்ச்சல் புறம்போக்கு என்று ஒரு இடம் இருந்தது. இன்றைக்கு அது சுத்தமாக இல்லை. மலை அடிவாரங்களில் காடுகளில் ஆடு-மாடுகள் மேய்க்கிற வாய்ப்பு இருந்தது அதுவும் இன்று தடுக்கப்பட்டிருக்கிறது. கால்நடை நம்முடைய செல்வங்கள் அது சார்ந்தது வேளாான் பெருங்குடி மக்களின் தற்சார்பு வாழ்க்கை.
தற்காலச்சூழலில் ஆடு-மாடுகள் வளர்ப்பது அவ்வளவு கடினமான ஒரு பணியாகி அதை விட்டுவிட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு நம்முடைய உறவுகள் தள்ளப்படுகிறார்கள். அதில் எவ்வளவு இடையூறுகள் இருக்கிறது; அது சார்ந்து எவ்வளவு பொருளாதாரம் இருக்கிறது; என்பதை எல்லாம் விளக்கி இந்த மாபெரும் மாநாட்டை நடத்த இருக்கிறோம்.
இந்த மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக நடந்து தமிழ்நாட்டை தாண்டி இந்திய பெருநிலத்தின் கவனத்தை இழுத்து, இதற்கு ஒரு முடிவைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்.
இது ஆடு மாடுகளின் உரிமை அல்ல; நம்முடைய உரிமை, நம் மண்ணின் உரிமை.ஆடும், மாடும் நம் உடன் பிறந்தவைகள்; நம்முடைய செல்வங்கள்.
இந்த மாடு மாடல்ல; நம் செல்வம்! அதனால் பேசும் திறனற்ற அவர்களுக்காகப் பேசுவதற்கு நாம் கூடுவோம்.
இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

