பா.ஜ.,வை பார்த்து தி.மு.க.,வினருக்கு தூக்கம் போயிடுச்சு; நயினார் நாகேந்திரன்

9


சென்னை: 'தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என்.டி.ஏ., ஆட்சி அமைய வேண்டும்,' என்று பா.ஜ., மாநில தலைவர் நாயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் பா.ஜ., முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது, பூத் அளவில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது; பா.ஜ.,வுக்கு 4 எம்.எல்.ஏ.,க்களை வேல் யாத்திரை கொடுத்தது. முருகன் மாநாடு எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் என்பதை உறுதி செய்யும். முருகன் மாநாட்டை நடத்தியது இந்து முன்னணியாக இருந்தாலும், அதனை சிறப்பித்தது பா.ஜ., தான். இதைப் பார்த்து தி.மு.க.,வினருக்கு தூக்கமில்லை. தமிழகத்தை ஓரணியில் திரட்டுவதற்கு என்ன இருக்கிறது. நமக்கு முதல்வர் ஸ்டாலின் தான். ஸ்டாலின் செய்யக் கூடிய காரியங்கள் தான் சரியில்லை.


சிவகங்கையில் வாலிபர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இன்று பிரதே பரிசோதனை அறிக்கையை மாற்றி எழுதியிருக்காங்க. தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என்.டி.ஏ., ஆட்சி அமைய வேண்டும்.


தி.மு.க., என்றுமே தொடர்ந்து ஆட்சியில் இருந்தது கிடையாது. 2006ல் மைனாரிட்ரி ஆட்சியை தான் தி.மு.க., அமைத்தது. இன்றைக்கு கூட அ.தி.மு.க., பா.ஜ., வாங்கிய ஓட்டுக்களை ஒப்பிட்டால், வெறும் 24 லட்சம் ஓட்டுகள் தான் வித்தியாசம். 234 தொகுதிகள் வாரியாக பார்த்தால் 11 ஆயிரம் ஓட்டுகள் தான். தி.மு.க.,வை விட ஒரு பூத்துக்கு 37 அல்லது 38 ஓட்டுகள் தான் குறைவாக பெற்றுள்ளோம்.


நமது நோக்கம் 2026 சட்டசபைத் தேர்தல் அல்ல. 2029 பார்லிமென்ட் தேர்தல் தான் நமது நோக்கம். தமிழகத்தில் இருந்து எத்தனை எம்.பி.,க்கள் நமக்கு கிடைக்கப் போகிறார்கள் என்பது தான் இலக்கு.


நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க.,வின் இ.பி.எஸ்., கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். நானும், மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்பட அனைவரும் கலந்து கொண்டு, அந்த சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து வைக்க உள்ளோம். இ.பி.எஸ்., சுற்றுப்பயணத்தில் பா.ஜ.,வினர் தங்களின் வலிமையை காண்பிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement