லாக் அப் மரணம் அடைந்த அஜித்தின் சகோதரருக்கு சிகிச்சை

26

சிவகங்கை: திருப்புவனத்தில் போலீசாரால் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது சகோதரர் நவீன் குமாரும் போலீசாரால் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளியான அஜித்குமார் நகை திருட்டு புகாரில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.


இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் அவரை பைப்புகளை வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை உண்டாக்கியது. அதுமட்டுமில்லாமல் அஜித் குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகி நீதிபதிகளையே அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதனிடையே, அஜித்தையும், தன்னையும் போலீசார் கொடூரமாக அடித்ததாக அவரது சகோதரர் நவீன் குமார் கூறியிருந்தார்.


இந்த நிலையில், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாரும் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போலீசார் தாக்கியதில் காலில் வலி ஏற்பட்டதாக கூறியதால், நவீனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தாய் மாமா கூறினார். தொடர்ந்து, மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு, நவீன்குமார் வீடு திரும்பினார்.

Advertisement