22 நாட்களுக்குப் பிறகு நகர்த்தப்பட்ட பிரிட்டீஷ் போர் விமானம்; நிபுணர்கள் குழு ஆய்வு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கோளாறு காரணமாக 22 நாட்களாக நிறுத்தி வைக்கப்படிருந்த பிரிட்டீஷ் கடற்படை போர் விமானம், நிபுணர்கள் ஆய்வுக்குப் பிறகு நகர்த்தப்பட்டது.
அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அதில் இருந்து புறப்பட்ட எப்35 பி போர் விமானம், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, இந்திய விமானப்படையின் உதவியுடன் கடந்த 14ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு எரிபொருள் நிரப்பினாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பறக்க முடியவில்லை. புறப்படுவதற்கு முன்பு செய்யப்பட்ட சோதனைகளின் போது, ஹைட்ராலிக் சிஸ்டம் பழுதடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.640 கோடி மதிப்புள்ள போர் விமானம், கடந்த மூன்று வாரங்களாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை சரி செய்ய பிரிட்டிஷ் கடற்படை பொறியாளர்கள் முயன்றாலும் எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து 25 நிபுணர்கள் கொண்ட குழு அட்லஸ் இசட்.எம்.417 ரக விமானத்தில் திருவனந்தபுரம் விமானநிலையம் வந்தனர். இந்தக் குழுவினர் போர் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தனர்.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏர் இந்தியா விமானங்கள் நிறுத்தும் பகுதிக்கு நகர்த்தி வைக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பிரிட்டீஷ் கடற்படை மறுப்பு தெரிவித்தது. தற்போது, அதற்கு ஒப்புக் கொண்டதால், 22 நாட்களுக்குப் பிறகு, எப்35 பி போர் விமானம், பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டது.
எப்35 பி போர் விமானத்தின் கோளாறை இந்தியாவிலேயே சரி செய்ய முடியுமா என்று நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அப்படி முடியாவிட்டால், எப்35 பி போர் விமானத்தை பகுதி பகுதியாக பிரித்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.





மேலும்
-
அனல் பறந்த ஆகாஷ் தீப் பந்துவீச்சு; இந்திய அணி அபார வெற்றி
-
இனி வீட்டில் இருந்தே ஸ்பீட் போஸ்ட் புக்கிங் செய்யலாம்; தபால் துறையின் அசத்தல் திட்டம்!
-
ஏமன் அருகே செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஹவுதி குழுவினர் அட்டகாசம்
-
ஜூலை 10ல் மேய்ச்சல் நில உரிமை மாநாடு: சீமான் அறிவிப்பு
-
நீலகிரி வனத்தில் வேட்டையாடிய பெண் உட்பட 5 பேர் கைது: துப்பாக்கிகள் பறிமுதல்
-
சர்வதேச நலன்களுக்கான சக்தி பிரிக்ஸ் கூட்டமைப்பு: பிரதமர் மோடி புகழாரம்