2 அரசு பள்ளிகளுக்கு பெயிண்ட் அடிக்க 443 பேர்; போலி ரசீதால் அம்பலமான மோசடி

14

போபால்: மத்திய பிரதேசத்தில் 2 அரசு பள்ளிகளுக்கு பெயிண்ட் அடிக்க ஆன செலவு ரூ.3.38 லட்சம் என்று சமர்ப்பிக்கப்பட்ட ரசீதுகள் மூலம் மோசடி அம்பலமாகி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது சகண்டி என்ற சின்னஞ்சிறிய கிராமம். இங்கு ஒரு அரசுப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஒரு சுவருக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டது. அதற்கான செலவினங்கள் எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள், ரசீதுகள் மூலமாக இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.


இந்த பள்ளிக்கு பெயிண்ட் அடிக்க மொத்தம் 4 லிட்டர் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டது. அதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் என்ணிக்கை மட்டுமே 168 பேர். இவர்கள் தவிர, 65 கொத்தனார்களும் பணியில் இணைந்துள்ளனர்.


133 பேர் சேர்ந்து தான் ஒரு சுவருக்கு பெயிண்ட் அடித்துள்ளனர். அதற்கான செலவு மட்டுமே ரூ. 1,06, 984. இப்படியான ஒரு ரசீதை அந்த பணியை செய்து முடித்த ஒப்பந்ததாரர் அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.


இதேபோன்று, நிபானியா என்ற ஊரில் உள்ள ஒரு அரசுப்பள்ளிக்கும் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. அங்கு 10 ஜன்னல்கள், நான்கு கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்க, 275 தொழிலாளர்களும்,150 கொத்தனார்களும் வேலை செய்திருக்கின்றனர். செலவு ரூ.2,31,685. மொத்தம் 20 லிட்டர் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டு உள்ளது.


இவ்வாறு 2 அரசுப் பள்ளிகளிலும் பெயிண்ட் அடிக்க 443 பேர் வேலை செய்திருக்கின்றனர். ரூ.3.38 லட்சம் செலவு பிடித்து இருக்கிறது. 24 லிட்டர் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான பில்களை உரிய அரசு அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அளித்துள்ளார்.


இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்விரு பள்ளிகளில் பெயிண்ட் அடித்தது ஒரேயொரு நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் பெயரில் தான் பில்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. அந்த ரசீதுகள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையாகி இருக்கிறது.

விசாரணைக்கு உத்தரவு


2 பள்ளிகளில் பெயிண்ட் அடிக்க இத்தனை ரூபாயா? எப்படி சாத்தியம்? என்ற கேள்விகளும் வெளியாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

Advertisement