ஹேர் க்ளிப், பாக்கெட் கத்தியை பயன்படுத்தி பிரசவம்: ரயில் நிலையத்தில் உதவிய ராணுவ மருத்துவர்!

ஜான்சி: உ.பி., மாநிலம் ஜான்சி ரயில் நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹேர் க்ளிப், பாக்கெட் கத்தியை பயன்படுத்தி குழந்தையை பிரசவிக்க உதவிய ராணுவ மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இது குறித்து வட மத்திய ரயில்வேயின் ஜான்சி பிரிவு மக்கள் தொடர்பு அதிகாரி மனோஜ் குமார் சிங் கூறியதாவது:
நேற்று பன்வெல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு கடுமையான பிரசவ வலியை எதிர்கொண்ட நிலையில், அவரை உறவினர்கள் ஜான்சி ரயில் நிலையத்தில் இறக்கினர்.
சூழ்நிலையை அறிந்த ஒரு பெண் டிக்கெட் பரிசோதகரும் ஒரு ராணுவ அதிகாரியும் விரைந்து வந்து அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவினர். இந்த நிலையில் ராணுவத்தின் மருத்துவ பிரிவை சேர்ந்த மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா 31, ரயிலுக்காக காத்திருந்தார்.
அப்போது அவர் எதிரே ஒரு ரயில்வே ஊழியர் சக்கர நாற்காலியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை அவசரமாக அழைத்துசெல்வதை அவர் கண்டார். உடனே டாக்டர் ரோஹித் பச்வாலா அந்த பெண்ணிற்கு ரயில்வே பிளாட்பாரத்தில் குழந்தை பிரசவிக்க உதவினார். இவ்வாறு மனோஜ் குமார் சிங் கூறினார்.
மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா கூறுகையில், 'அந்த ஆபத்தான நேரத்தில் என்னிடம் இருந்த கருவிகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது. தொப்புள் கொடியை இறுக்க நான் ஒரு ஹேர் க்ளிப் பயன்படுத்தினேன். குழந்தை நிலையாக இருந்ததால், பாக்கெட் கத்தியை வைத்து வெட்டினேன். தேவையான உதவி அளித்த உடன் குழந்தை பிரசவம் ஆனது.
ரயில்வே ஊழியர்களின் ஏற்பாட்டில் தாயும் சேயும் உள்ளூர் மருத்துவனைக்கு மாற்றப்பட்டனர். அவசர நிலையை வெற்றிகரமாக கையாள தெய்வத்தின் ஆசி இருந்தது.
ஒரு மருத்துவராக, நாம் எல்லா நேரங்களிலும், போக்குவரத்திலும் கூட அவசரநிலைகளுக்கு தயாராக இருக்க வேண்டும். இரண்டு உயிர்களைக் காப்பாற்ற உதவ முடிந்ததை ஒரு ஆசீர்வாதமாகக் கருதுகிறேன் என்றார்.
சமூகவலைதளத்தில் இந்த சம்பவம் வைரலான நிலையில் ''மேஜர் ரோஹித்துக்குப் பாராட்டுகள், ஒரு உண்மையான ஹீரோ", "கடமையின் அழைப்பைத் தாண்டிச் சென்ற ராணுவ டாக்டருக்குப் பாராட்டுகள். புதிதாகப் பிறந்தவர்களுக்கு ஆசீர்வாதங்கள்'' என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.






மேலும்
-
உலக குத்துச்சண்டை: சபாஷ் சாக் ஷி
-
ஹர்விந்தர் சிங் 'ஹாட்ரிக்' தங்கம்: ஆசிய பாரா வில்வித்தையில்
-
கென்ய வீராங்கனைகள் உலக சாதனை: சர்வதேச தடகள போட்டியில்
-
அரையிறுதியில் ரியல் மாட்ரிட்: கிளப் உலக கோப்பை கால்பந்தில்
-
12 ஆண்டுகள் வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம்; கான்ஸ்டபிளின் நூதன மோசடி
-
பாலியல் வன்கொடுமை செய்யும் திரிணமுல் தலைவர்கள் பட்டியல்: பா.ஜ., அதிர்ச்சி