மதுரவாயல் - தாம்பரம் சாலையில் விளம்பர பலகை, பேனர்கள் அதிகரிப்பு

மதுரவாயல்:மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் மற்றும் வானகரம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விளம்பர பலகைகள், பேனர்கள் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்கின்றனர்.

வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில், சாலைகள் மற்றும் சாலையோரங்களில் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதையடுத்து, விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்க தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தன.

ஆனால், சமீபத்தில் சென்னையில் கட்சி விளம்பர பேனர்கள், தனியார் நிறுவன பேனர்கள் அதிகரித்துள்ளன.

இதில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள போரூர் சுங்கச்சாவடியில் இருந்து மதுரவாயல் வரை உள்ள மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலை மற்றும் மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மீண்டும் ஏராளமான விளம்பர பலகைகள் அதிகரித்துள்ளன.

எனவே, இந்த விளம்பர பலகைகளை முறைப்படுத்தவும், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக, சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement