போலீசாருக்கு இரண்டு ஷிப்ட்டுக்கு பதிலாக... 3 ஷிப்ட் முறை! பணிச்சுமையை குறைக்க மாநில அரசு முடிவு

போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு தகவலின்படி, கர்நாடகாவில் 70,407 சிவில் போலீசார் பணியாற்றுகின்றனர். ஆனால் இது போதுமானதாக இல்லை. ஏட்டுகள், ஏ.எஸ்.ஐ.,க்கள் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ளன. 1 லட்சம் மக்களின் பாதுகாப்புக்கு, வெறும் 104 போலீசார் உள்ளனர்.

12 மணி நேரம்



தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உட்பட, வட மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதன் விளைவாக பணியில் உள்ள போலீசாருக்கு, பணிச்சுமை அதிகரித்துள்ளது. போலீசார் வார விடுமுறையும் இல்லாமல், தினமும் 12 மணி நேரம் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது காலை மற்றும் இரவு என, இரண்டு ஷிப்ட்களில் 12 மணி நேரம் வீதம் போலீசார் பணிக்கு நியமிக்கப்படுகின்றனர். காலை 8:30 மணிக்கு வந்தால், இரவு 8:30 மணி வரை பணியாற்ற வேண்டும். அதே போன்று இரவு 8:30 மணிக்கு வந்தால், மறுநாள் காலை 8:30 மணி வரை பணியாற்ற வேண்டும்.

அதிலும், நிர்ணயித்த நேரத்தில் பணியில் இருந்து விடுவிப்பது இல்லை. ஏதாவது வழக்குகள் வந்தால், பாதுகாப்பு பணி இருந்தால், ஹொய்சளா ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டால், கூடுதலாக ஒன்றிரண்டு மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது.

வார விடுமுறை



இதற்கு முன், போலீசாருக்கு அளிக்க வேண்டிய சலுகைகள், ஊதிய உயர்வு தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, பெங்களூரு நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவுரத் தலைமையில், மாநில அரசு தனிக்குழு அமைத்தது. இக்குழுவினரும் ஆய்வு செய்து, பல சிபாரிசுகளை செய்திருந்தது. இவற்றில் போலீசாருக்கு வார விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். அதன்படி அரசும், வார விடுமுறை அளிக்கும்படி, போலீஸ் துறைக்கு உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்த, போலீஸ் அதிகாரிகளால் முடியவில்லை. இதற்கு போலீசார் பற்றாக்குறையே காரணமாகும். போலீசாரின் பணி நெருக்கடியை குறைப்பது குறித்து, தேசிய பொது நியாய குழு தலைவர் ஸ்கந்த சரத், அரசுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், 'பொது மக்களின் பாதுகாப்பில், போலீசாரின் பங்களிப்பு அதிகம். அவர்களின் பணித்திறனை மேம்படுத்தும் பெயரில், பாடி கேமரா, வாக்கி டாக்கி, ஜி.பி.ஆர்.எஸ்., அளித்து போலீசார் இயந்திர மனிதர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பம், வீடு, பெற்றோர், மனைவி, குழந்தைகள் இருப்பதை மறந்து, காலை முதல் இரவு வரை பணியாற்றுகின்றனர்.

மருத்துவ பரிசோதனை



பண்டிகை நாட்களிலும் கூட, அவர்கள் குடும்பத்துடன் கொண்டாட முடியாமல், பணியில் ஈடுபடுகின்றனர். இது அவர்களின் மன நிலை, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, போலீசாருக்கும், ஆண்டுக்கு ஒரு முறை அவர்களின் குடும்பத்தினருக்கும், மருத்துவ பரிசோதனை செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.

'தற்போது போலீசார், இரண்டு ஷிப்ட்களில் பணியாற்றுகின்றனர். இதை மூன்று ஷிப்டாக மாற்ற வேண்டும். இதனால் அவர்களின் பணிச்சுமை குறையும்' என, ஆலோசனை கூறியிருந்தார்.

ஸ்கந்த சரத்தின் ஆலோசனைப்படி, போலீசாரின் இரண்டு ஷிப்ட் பணியை, மூன்று ஷிப்டாக மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது. அப்படி மாற்றினால் பணி நேரம் 12 மணிக்கு பதிலாக, எட்டு மணியாக குறையும். எனவே இந்த புதிய நடைமுறையை செயல்படுத்துவது குறித்து, மாநில போலீஸ் டி.ஜி.பி.,யிடம் அறிக்கை அளிக்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.

அறிக்கை தாக்கல்



அவர் அறிக்கை தாக்கல் செய்த பின், சாதகம், பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும். விரைவில் போலீசாருக்கு மூன்று ஷிப்ட் பணி நடைமுறை அமலுக்கு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பணி அழுத்தம் காரணமாக, போலீசார் மாரடைப்பு உட்பட பல கடுமையான நோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். எனவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதை கட்டாயமாக்கும் கோரிக்கையையும், அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

Advertisement