தலைமை செயலகம் முன் வரையாடு சிலை

சென்னை : தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான, நீலகிரி வரையாடு சிலை, தலைமை செயலகம் எதிரே உள்ள பூங்காவில் அமைக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதியில் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அடையாளமாக ஸ்ரீவில்லிபுதுார் ஆண்டாள் கோவில் கோபுரம், மரகத புறா, தமிழ் மறவன் பட்டாம்பூச்சி, நீலகிரி வரையாடு, செங்காந்தள் மலர், பலா, பனைமரம், கபடி, பரதநாட்டியம் ஆகியவை உள்ளன.
இதில், மாநில விலங்கான நீலகிரி வரையாடு, மேற்குதொடர்ச்சி மலையில் வாழும் மிக அரிய காட்டுயிர். பாதுகாக்கப்பட வேண்டிய காட்டுயிர் பட்டியலில், வரையாடு உள்ளது.
வரையாடுகளை பாதுகாக்க, 2023ம் ஆண்டு, தமிழக அரசு 25 கோடி ரூபாயில், வரையாடு பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தது. வரையாட்டில் 'ரேடியோ காலர்' என்ற மின்னணு சாதனத்தை பொருத்தி, வழித்தடங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
இந்த வரையாட்டின் மகத்துவத்தை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், சென்னை தலைமை செயலகம் எதிரே உள்ள மாநகராட்சி பூங்காவில், 95 லட்சம் ரூபாய் செலவில் வரையாடு சிலை அமைக்கப்படுகிறது. அதனை சுற்றி, புல்தரை, அழகுபடுத்தும் பணி நடக்கிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வரையாடு சிலை பைபர் மூலப்பொருளை கொண்டு, 5 மி.மீ., தடிமனில் அமைக்கப்படுகிறது. சிலை அமைக்கும் பணி மற்றும் அதை சுற்றி அழகுபடுத்தும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது. இம்மாதம் இறுதியில் திறக்கப்படும்.
அடுத்த கட்டமாக, ஜல்லிக்கட்டு போட்டியின் மகத்துவத்தை தெரிவிக்கும் வகையில், காங்கேயம் காளை சிலை அமைக்கும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும்
-
54 அடி உயர சிவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
-
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
-
கடல் நோக்கி பாயும் காவிரி உபரி நீரை காய்ந்த ஏரிகளுக்கு திருப்பி விடுங்க: கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்
-
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்