செயல்படாத சிக்னல்களால் பாதிப்பு

சிவகாசி : சிவகாசி சாத்துார் ரோடு விலக்கில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்தில் பாதிக்கப்படுவதோடு விபத்திற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

சிவகாசி சாத்துார் ரோடு விலக்கில் பஸ் ஸ்டாண்ட், சாத்துார் ரோடு, பைபாஸ் ரோடு பிரிந்து செல்கின்றது. நகருக்குள், பஸ் ஸ்டாண்டிற்கு வரவேண்டிய அனைத்து வாகனங்களும் இதன் வழியாகத்தான் வரவேண்டும். இந்நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை டிராபிக் சிக்னல்கள் செயல்படவில்லை. இதனால் எப்பொழுதுமே போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது.

சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இப்பகுதியில் விசேஷ காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது. தவிர அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. எனவே இங்கு டிராபிக் சிக்னல்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement