சித்தராமையாவுக்கு தேசிய அளவில் கட்சி பதவி; மாநிலத்தை விட்டு விரட்ட திட்டம் என பா.ஜ., கிண்டல்

பெங்களூரு : 'அகில இந்திய காங்கிரஸ் ஓ.பி.சி., பிரிவின், தேசிய ஆலோசனை குழு தலைவராக, முதல்வர் சித்தராமையா நியமிக்கப்பட்டு உள்ளார்' என்று நேற்று காலை வதந்தி பரவிய நிலையில், 'அந்த குழுவின் உறுப்பினராக மட்டுமே முதல்வர் உள்ளார்' என்று, அவரது அலுவலகம் நேற்று மாலை தெளிவுபடுத்தியது.

அரசியலில் பரபரப்பு



'கர்நாடக அரசியலில் வரும் செப்டம்பர் மாதம் புரட்சி நடக்கும்' என்று, கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா சில தினங்களுக்கு முன்பு கூறினார். முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றிவிட்டு, சிவகுமாரை நியமிப்பது தான் அந்த புரட்சி என்று, எதிர்க்கட்சியான பா.ஜ., தலைவர்கள் கூறியதால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் ஓ.பி.சி., பிரிவின் தேசிய ஆலோசனை குழு தலைவராக, சித்தராமையா நியமிக்கப்பட்டு உள்ளார் என்று நேற்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சித்தராமையா தேசிய அரசியலுக்கு செல்ல போவதாகவும் விவாதங்கள் நடந்தன.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''கட்சியின் ஓ.பி.சி., பிரிவு தேசிய ஆலோசனை குழு தலைவராக, என்னை நியமிப்பது இருப்பதை ஊடகம் மூலம் அறிந்து கொண்டேன்.

''என்னிடம் இதுபற்றி மேலிடம் எதுவும் கேட்கவில்லை. அவர்களாக நியமித்து உள்ளனர். இதுபற்றி மேலிடத்திடம் கேட்பேன். பொறுப்பு கொடுத்து உள்ளனர். பொறுப்பு வேண்டாம் என்று ஓடி போக முடியுமா,'' என்றார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''நான் கூறிய ஜோதிடம் பலிக்க போகிறது. நவம்பரில் முதல்வர் மாற்றம் நடக்கும் என்று கூறினேன். அதற்கு முதற்படி தான் சித்தராமையாவுக்கு தேசிய அளவில் பதவி கொடுத்து இருப்பது. எம்.எல்.ஏ.,க்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்.

''முதல்வர் பதவியில் இருந்து அவரை நீக்க சதி நடக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கு கேட் பாஸ் வழங்கப்படுவது நிச்சயம்,'' என்றார்.

மத்திய உணவு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், ''சித்தராமையாவால் இங்கேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. தேசிய அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார். அவரை தேசிய அரசியலுக்கு அழைக்க, கட்சி மேலிடம் செய்தி அனுப்பி உள்ளது. அவரை கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும்,'' என்றார்.

மேலும் சில பா.ஜ., தலைவர்கள், 'ராஜண்ணா கூறிய புரட்சி இதுதான்' என்று விமர்சித்தனர்.

அனில் ஜெய்ஹிந்த்



இந்நிலையில் நேற்று மாலை முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'அகில இந்திய காங்கிரஸ் ஓ.பி.சி., பிரிவின், தேசிய ஆலோசனை குழு தலைவராக, முதல்வர் சித்தராமையா நியமிக்கப்படவில்லை.

'அவர் அந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவர். வரும் 15ம் தேதி ஓ.பி.சி., பிரிவின் தேசிய ஆலோசனை குழு கூட்டம், குழுவின் தலைவர் அனில் ஜெய்ஹிந்த் தலைமையில், பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு சித்தராமையா தலைமை வகிப்பார்' என கூறப்பட்டு உள்ளது.

வேறு வேலை இல்லை!

துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதால், ஓ.பி.சி., பிரிவின் தேசிய ஆலோசனை குழு கூட்டத்தை, பெங்களூரில் நடத்தலாம் என்று, கட்சி மேலிடத்திற்கு நான் தான் பரிந்துரை செய்தேன். அதன்படி இங்கு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேசிய தலைவர்கள் பங்கேற்பர்.

''ஓ.பி.சி.,யில் பல பிரிவுகள் உள்ளன. தேசிய அளவில் லிங்காயத், ஒக்கலிகர்களும் ஓ.பி.சி., பிரிவில் உள்ளனர். சித்தராமையாவை பற்றி விமர்சிக்காமல், பா.ஜ., தலைவர்களால் இருக்க முடியாது. அவர்களுக்கு வேறு வேலை இல்லை. விமர்சனம் செத்து விடும். வேலை நிலைத்து நிற்கும்,'' என்றார்.

Advertisement