கடல் நோக்கி பாயும் காவிரி உபரி நீரை காய்ந்த ஏரிகளுக்கு திருப்பி விடுங்க: கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில், காவிரி ஆற்றின் உபரி நீர் கடலில் சென்று வீணாகிறது. 'அதை காய்ந்த ஏரி, குளங்களுக்கு திருப்பி விட்டால், நிலத்தடி நீர் மட்டமும் உயரும்; விவசாயமும் செழிக்கும்' என்கின்றனர், பாதிக்கப்பட்ட விவசாயிகள்.
ஜூன், ஜூலை பிறந்தாலே டெல்டா மாவட்டங்களில் ஒலிக்கும் ஒரே குரல், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வீணாகிறது என்பது தான். கரை புரண்டு காவிரியில் தண்ணீர் ஒடினாலும், கடைமடையில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் தண்ணீர் வறண்டு கிடக்கின்றன என்பது வேதனை அளிக்கும் உண்மையாக இருக்கிறது. இந்த நிலைக்கு தீர்வு காண, கடலில் கலக்கும் நீரை, விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் ஏரி, குளங்களுக்கு திருப்பி விட வேண்டும் என்பது கோரிக்கை.
கர்நாடக, கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. அணையின் முழு கொள்அளவு 120 அடி. அதற்கு மேல் உபரியாக வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடுகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர், மேலணை (முக்கொம்பு), கல்லணை, கீழ்ணை (அணைக்கரை) மூலம், பாசன வசதிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில், முக்கொம்பில் காவிரி ஆறு இரண்டாக காவிரி, கொள்ளிடம் என பிரிகிறது. கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் என நான்கு ஆறுகளாக பிரிகிறது.
இதில் காவிரி, வெண்ணாறு ஆறுகளில் மட்டுமே 36 ஆறுகள் பிரிந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை வளப்படுத்துகின்றன. இதன் மூலம் 15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கல்லணை கால்வாய் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது.
ஏரிகள் எத்தனை
காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 764 ஏரிகள் மற்றும் குளங்கள் நீர்வளத்துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. இதில், கல்லணை கால்வாயின் கீழ் மட்டும் 600 ஏரிகள் உள்ளன. அத்துடன் கரூர் மாவட்டம் மாயனுார் அணையில் இருந்து பிரியும் கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யங்கொண்டான் வாய்க்கால் மூலம் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, பூதலுார் பகுதியிலும், திருச்சி, கரூர் மாவட்டங்களிலும் நுாற்றுக்கணக்கான ஏரிகள் தண்ணீர் பெறும் வசதி உள்ளது.
அற்புத நீர் மேலாண்மை
காவிரியில் வரும் தண்ணீரானது, கல்லணை மூலம் டெல்டா மாவட்டங்களில், 11 ஆயிரம் கிலோ மீட்டர் துாரத்திற்கு வாய்க்கால்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
பழங்கால மன்னர்கள் ஏற்படுத்திய இத்தகையை அற்புத நீர் மேலாண்மையை, விவசாயிகளும், அரசாங்கமும் முறையாக பராமரிக்க தவறியதின் விளைவு தான். வீணாக கடலில் உபரி நீர் கலக்கிறது. இதை தடுத்து, காய்ந்து போன ஏரி, குளங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றபடுகிறது. முக்கொம்பில் இருந்து 37,389 கன.அடியும், கல்லணையில் இருந்து 3,718 கன அடியும் நீர் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீராக செல்கிறது.
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆறுகளில் தண்ணீர் முழுமையாக திறக்கப்பட்டதால் கடைமடை வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வறண்ட ஏரிகள்
@block_B@அதே சமயம் கடைமடை மாவட்டங்களில் ஏரி, குளங்கள் அனைத்தும் இன்னும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் கீழ் உள்ள 85 ஏரிகள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் சமீபத்தில் போராட்டத்தில் குதித்தனர்.block_B
தடுப்பணை
திருச்சி முக்கொம்பு முதல் மயிலாடுதுறை பழையறை வரை 150 கிலோ மீட்டர் பயணிக்கும் கொள்ளிடம் ஆறு, பல லட்சம் ஏக்கர் விவசாயமும், கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிதளமாகவும் உள்ளது. இந்த கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட முடியும்.
அதன் மூலம் ஆங்காங்கே உள்ள ஏரி குளங்களும் நிரம்பும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும், விவசாயம் செழிக்கும் என விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதனை ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் அரசுகள் கண்டுக்கொள்ளுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை விவசாயிகள் கூறி வருகின்றனர்.
ஏரி, குளங்கள்
கல்லணை கால்வாய் மூலம் சுமார் 600க்கும் மேற்பட்ட ஏரி,குளங்களில் தண்ணீரை சேமிக்க முடியும் என விவசாயிகள் கூறினாலும், மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும் என்கிற காரணத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறி அதை தட்டிக்கழிக்கின்றனர்.
இதனால் ஆண்டுக்கு 8 மாதங்கள் ஏரிகள், குளங்கள் வறண்டு தான் காட்சியளிக்கிறது. ஏரிகளுக்கு வரும் நீர்வழிபாதையும் மறைந்து போகி விட்டது என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
@block_P@இதற்கு தீர்வு காண, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீணாகி கடலில் கலக்கும் தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்தும் திட்டங்களை உருவாக்க வேண்டும்.block_P










மேலும்
-
இ.பி.எஸ். கூட்டத்தில் அ.தி.மு.க.,வினரிடம் ரூ.2 லட்சம் பிக்பாக்கெட்
-
கடலில் சிக்கிய 4 இந்திய மீனவர்களை மீட்டது இலங்கை கடற்படை
-
டில்லியில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை; வங்கதேசத்தினர் 18 பேர் கைது
-
அஜித்குமார் மரண வழக்கு: த.வெ.க. போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி
-
அதிகாலை பயணத்தில் மரத்தில் மோதி கார் விபத்து: ம.பி.,யில் 3 பெண்கள் பலி;15 பேர் காயம்
-
உலகின் கவனத்தை திருப்பிய இந்திய பாதுகாப்புத்துறை ; ராஜ்நாத்சிங் பெருமிதம்