விபத்தில் இருவர் பலி: பைக் தீ பிடித்து எரிந்தது

மைசூரு : இரு பைக் இடையில் ஏற்பட்ட மோதலில், உணவு விற்பனை பிரதிநிதி உட்பட, இருவர் இறந்தனர். விலை உயர்ந்த, 'ஹயபுசா' பைக் தீப்பிடித்து எரிந்தது.

சாம்ராஜ்நகர் டவுன் கே.பி.மொகல்லாவை சேர்ந்தவர் சையது ஷரீன் என்கிற சரா, 30. இவர், விலை உயர்ந்த 'ஹயபுசா' பைக் வைத்து இருந்தார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, மைசூரு டவுன் நெல்சன் மண்டேலா சாலையில் உள்ள, பால்பவன் பகுதியில் பைக்கில் அதிவேகமாக, சையது ஷரீன் சென்றார். அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே வந்த இன்னொரு பைக் மீது மோதியது.

சையது ஷரீனும், எதிரே வந்த பைக்கை ஓட்டியவரும் துாக்கி வீசப்பட்டனர்.

சையது ஷரீன் பைக் தரையில் உரசி கொண்டு சென்று, மின்கம்பத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. விபத்து பற்றி அறிந்த, நரசிம்மராஜா போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே இருவரும் இறந்து விட்டனர். எதிரே வந்த பைக்கை ஓட்டியவர், மைசூரு போகாதி பகுதியின் கார்த்திக், 42 என்பதும், உணவு விற்பனை பிரதிநிதி என்றும், வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு வினியோகித்துவிட்டு வந்ததும் தெரிந்தது.

'மைசூரின் முக்கிய சாலைகளில், அதிகாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஸ்டன்ட் செய்தபடி பைக் ஓட்டி, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இத்தகையவர்களால் தான் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Advertisement