உலகின் கவனத்தை திருப்பிய இந்திய பாதுகாப்புத்துறை ; ராஜ்நாத்சிங் பெருமிதம்

6

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகம் சார்பில் 3 நாள் நடக்கும் மாநாடு இன்று தொடங்கியது. இதனை தொடங்கி வைத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவம் மற்றும் உள்நாட்டு ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது; இன்று உலகமே நமது பாதுகாப்புத்துறையை திரும்பிப் பார்க்கின்றன. ஆபரேஷன் சிந்தூரின் மூலம் நமது ராணுவ வீரர்களின் வீரம் வெளிப்பட்டது. அதேபோல, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நமது ராணுவ தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச ராணுவ செலவு 2.7 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம், மிகப்பெரிய வர்த்தகம் நமக்காக உருவாக இருக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் உலகின் பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம். மக்களின் வருமானத்தில் ஒரு பெரும் பங்கு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படுவதால், நமது பொறுப்பு மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, பட்ஜெட்டை சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement