ஆணைகள் செயலாக்கம் பெறவேண்டும் என்பது தான் திராவிட மாடல்: முதல்வர் ஸ்டாலின்

7

சென்னை: ஆணைகள் அனைத்தும் செயலாக்கம் பெறவேண்டும் என்பது தான் திராவிட மாடல் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.



சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை, இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை என மொத்தம் 10 துறைகளின் அதிகாரிகளுடன் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.


ஒவ்வொரு துறையிலும் அரசின் அறிவிப்பாணைகளின் செயலாக்கம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதை விரைவுபடுத்தும் வகையில் உரிய ஆலோசனைகளையும் வழங்கினார்.


பின்னர் ஆய்வுக்கூட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றி 28 விநாடிகள் அடங்கிய வீடியோவுடன் கூடிய ஒரு பதிவை அவர் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளதாவது;


நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன்.


ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன்.


அறிவித்தால் ஆணையாக வேண்டும். அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும். அதுதான் திராவிட மாடல் என அனைவர் மனதிலும் பதிய வேண்டும்.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Advertisement