இஸ்ரோ குழுவுக்கு நன்றி: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாராயணனுடன் சுபான்ஷூ சுக்லா உரையாடல்!

1


புதுடில்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் சக இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது இஸ்ரோ குழுவினருக்கு சுக்லா உணர்ச்சிபூர்வமாக நன்றி தெரிவித்தார்.


அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'டிராகன்' விண்கலம் வாயிலாக, 'ஆக்சியம் மிஷன் 4' திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர்.


சுபான்ஷு சுக்லா, ஆக்சியம் 4 திட்டத்தின் சக உறுப்பினர்களான நாசா விஞ்ஞானி பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோருடன் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து சுக்லா, இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் சக இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது விண்வெளிக்கு தனது பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான பயணத்தை சாத்தியமாக்கியதற்காக இஸ்ரோ குழுவினருக்கு சுக்லா நன்றி தெரிவித்தார்.


விண்வெளி நிலையத்தில் சுக்லாவின் ஆய்வு, இந்தியாவின் ககன்யான் திட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், பணிக்குப் பிறகு அனைத்து நடவடிக்கைகளையும், கவனமாக ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இஸ்ரோ தலைவர் நாராயணன் வலியுறுத்தினார்.


சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த இந்த வாய்ப்பை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு இந்திய விண்வெளி வீரர் சுக்லா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, வெற்றிகரமான பயணத்திற்கு உதவிய இஸ்ரோ தலைவர் மற்றும் குழுவினரின் முயற்சிகளை சுக்லா பாராட்டியுள்ளார்.


விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் மற்றும் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த, தனது அனுபவத்தை சுக்லா பகிர்ந்து கொண்டார். அவர், அறிவியல் ஆய்வுகளின் போது எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்தார் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement