டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு: பேரிடராக அறிவித்த டிரம்ப்

2

டெக்சாஸ்: டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.



அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழை அங்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடக்கத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கையானது ஒற்றை இலக்கத்தில் இருந்தது.


பின்னர் படிப்படியாக அதிகரித்து கிட்டத்தட்ட பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள கர்கவுண்டியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.


இந் நிலையில் பெரும் சேதம், உயிரிழப்பு எதிரொலியாக இதை பேரிடராக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான கோப்பில் அவர் கையெழுத்திட்டுள்ளார். ஏராளமான குடும்பங்கள் கற்பனை செய்து முடியாத ஒரு சோகத்தை தாங்கி வருகின்றன. பல உயிர்கள் பறிபோயுள்ளன, இன்னமும் பலரை காணவில்லை என்று கூறி உள்ளார்.


பெரும் பாதிப்பை சந்தித்துள்ள டெக்சாஸ் மாகாணத்திற்கு அதிபர் டிரம்ப் விரைவில் வந்து பார்வையிட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

Advertisement