சட்டசபை தேர்தல் பிரசாரம்: மேட்டுப்பாளையத்தில் துவக்கினார் இ.பி.எஸ்.,

3

மேட்டுப்பாளையம்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 52 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் 2026 சட்டசபை தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கி உள்ளார். தேர்தல் பிரசாரத்துக்காக பிரத்யேக தயாரிக்கப்பட்ட சொகுசு பஸ்சில் பயணித்தபடி அவர் மக்களை சந்தித்தார்.


தொடக்க நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் தேர்தல் பிரசார சொகுசு பஸ்சில் தமது பிரசாரத்தை இ.பி.எஸ்., தொடங்கினார்.


திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இ.பி.எஸ்., பேசியதாவது:


இந்த கூட்டத்தை கண்டு ஸ்டாலினுகு ஜூரம் வந்துவிடும், மருத்துவரிடம் செல்ல வேண்டி இருக்கும். 2026ல் தி.மு.க.,வை வீழ்த்தும், நல்லாட்சியை கொண்டு வருவோம்.


ஸ்டாலின் பேசுகிறார் அ.தி.மு.க., எப்படி பாஜகவும் கூட்டணி வைக்கிறது என்று? உங்களுக்கு ஞாபக மறதி என்று நினைக்கிறேன். 1999ல் பாஜவுடன் நீங்கள்(ஸ்டாலின்) கூட்டணி வைத்தீர்களா? இல்லையா? அதன் பின்னர் 2001 சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்தீர்களா? இல்லையா?


நீங்கள் கூட்டணி வைத்தால் பா.ஜ. நல்ல கட்சி. ஆனால் நாங்கள் வைத்தால் பா.ஜ., மதவாத கட்சி. அ.தி.மு.க., ஆட்சியில் பொற்கால ஆட்சி கொடுத்தோம். எங்களின் ஆட்சியில் எந்த குற்றமும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.


மத்தியிலே ஆட்சி, அதிகாரத்திலே பா.ஜ. வந்த போது 1999ல் கூட்டணியில் இருந்தீர்கள். தி.மு.க., எம்பிக்கள் மத்திய அமைச்சரவையில் 5 ஆண்டுகாலம் அமைச்சர்களாக இருந்தார்களா? இல்லையா? நாட்டு மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.


இன்றைக்கு மத்தியிலே ஒரு நிலையான ஆட்சி, வலுவான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. தி.மு.க., இந்த தேர்தலோடு முடிவு கட்டப்படும். அது மட்டுமல்ல... மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவுமே செய்யல, எதுவுமே கொடுக்கல என்று கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி பேசிக் கொண்டே இருக்கிறீர்கள்.


இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தது தி.மு.க. அப்போது தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள்? என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? என்ன நிதி கொண்டு வந்தீங்க? ஒண்ணுமே இல்லை.


குடும்பத்திலே இருப்பவர்களுக்கு மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் இருக்க வேண்டும். அதை வைத்து கொள்ளையடிக்க வேண்டும். அதுதான் திமுகவின் குறிக்கோள்.


2011 முதல் 2021 வரை அ.தி.மு.க., ஒரு பொற்கால ஆட்சியை கொடுத்தது. விலைவாசி உயர்வு இல்லை. மின்சாரக்கட்டணம் உயரவில்லை. வீட்டுவரி உயரவில்லை. வீட்டு வரி உயர்வு இல்லை, தொழில் சிறந்தது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள்.


ஆனால் இன்றைய நிலை என்ன? தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் 52 சதவீதம் மின் கட்டணம் உயர்வு. வீட்டு வரி உயர்வு 100 சதவீதம், கடைக்கு 150 சதவீதம் உயர்வு. இதுதான் இப்போதைய நிலை. இதற்காகவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்?


இப்போது எங்கே பார்த்தாலும் திருட்டு, கொலை, கொள்ளை, சிறுமி முதல் பாட்டிவரை பாலியல் வன்கொடுமை.


திறமையற்ற நிர்வாகம் தமிழகத்திலே இருந்து கொண்டு இருக்கிறது. அண்மையில் அஜித்குமாரை கடுமையாக தாக்கி, அவர் உயிரிழந்து இருக்கிறார். அவரின் உடலில் உள்ள காயங்கள் 51. காயம்பட்ட காரணத்தினால் அவர் உயிரிழந்து இருக்கிறார் என்று மருத்துவ அறிக்கை கூறி இருக்கிறது.


சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் தமிழகத்தில் தொடருகிறது. 2021 தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத 525 அறிவிப்புகளை வெளியிட்டீங்க. இதுவரை நீங்கள் எத்தனை அறிவிப்புகளை செயல்படுத்தி இருக்கீங்க?


சுமார் 15 சதவீதம் அறிவிப்புகள் தான் நிறைவேற்றி இருக்கின்றனர். எஞ்சிய அறிவிப்புகள் அனைத்தும் பொய் அறிவிப்புகள்.


இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


காரமடையில் பேசியதாவது:-

மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை வரும் போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. விளையும் பயிர் முலையிலேயே தெரியும். 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும். அதற்கு இந்த கூட்டமே சாட்சி. இந்த எழுச்சி பயணம் வெற்றிப் பயணமாக மாறும். அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயரவில்லை, மின்கட்டணம் உயரவில்லை, குடிநீர் கட்டணம் உயரவில்லை. தி.மு.க., ஆட்சியில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சி, மாநகராட்சி என எல்லாவற்றிலும் வீட்டு வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் வரி உயர்வு. குப்பைக்கும் வரி போடப்பட்டுள்ளது. இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும். இன்னும் பல கட்சிகள் நம்மோடு இணைய இருக்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் கோவை - மேட்டுப்பாளையத்தில் சிறப்பான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2 நான் நிறைவேற்றி தருவேன். நான் ஒரு விவசாயி. மேட்டுப்பாளையம் பகுதி வேளாண் மக்கள் நிறைந்த பகுதி.

மும்முனை மின்சாரம் அ.தி.மு.க., ஆட்சியில் கொடுக்கப்பட்டது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் 50 நாள் திட்டமானது. ஏழைகள் வாழ்வு மலர வேண்டும்.

கூலி தொழிலாளி கஷ்டத்தை உணர்வேன். மக்களின் பிரச்சனைகளை நன்கு உணர்ந்தவன். ஆட்சி மாற்றம் உறுதி. அ.தி.மு.க., ஆட்சி உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement