குண்டும், குழியுமான நெடுஞ்சாலை 'பேட்ஜ் ஒர்க்' செய்த இளைஞர்கள்
சூளகிரி, சூளகிரி அருகே காமன்தொட்டி கிராமத்திலிருந்து, புக்கசாகரத்திற்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் செல்வதால், சாலை சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர், 'பேட்ஜ் ஒர்க்' கூட செய்யவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழைநீர் அதிகளவில் தேங்கியது. அதனால், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, காமன்தொட்டி அருகே உள்ள கங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் மோகன், பாலாஜி உள்ளிட்ட சில இளைஞர்கள் ஒன்றிணைந்து, சாலையில் பேட்ஜ் ஒர்க் செய்ய முடிவு செய்தனர். அதற்காக தார் கலவையை விலைக்கு வாங்கி, காமன்தொட்டியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் சர்வீஸ் சாலை அருகே துவங்கி, புக்கசாகரம் சாலையிலுள்ள குண்டும், குழிகளில், 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உதவியுடன், தார் கலவையை போட்டு நேற்று முன்தினம் மாலை பேட்ஜ் ஒர்க் செய்தனர்.
மேலும், காமன்தொட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து, புக்கசாகரம் மற்றும் உங்கட்டி கிராமத்திற்கு பிரிந்து செல்லும் இரு சாலைகளிலும், குண்டும், குழியுமான இடங்களிலும், பேட்ஜ் ஒர்க் செய்தனர். இதனால் அவ்வழியாக செல்லும் நுாற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.