மொபைல் போனை திருப்பி கேட்டவரை தாக்கியவர் கைது

ஜெயநகர் : அவசரத்துக்கு கொடுத்த மொபைல் போனை திருப்பிக் கேட்டதால் அதன் உரிமையாளரை இரவல் வாங்கிய நபர் தாக்கினார். அவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் மிதுன்குமார். இம்மாதம் 3ம் தேதி காலையில் பட்டாளம்மா கோவில் சாலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அஸ்கர் என்பவர், 'என் மொபைல் போன் உடைந்து விட்டது; போன் செய்ய வேண்டும்' என கூறி, மிதுன் குமாரிடம் மொபைல் போன் கேட்டுள்ளார்.

மிதுன் குமாரும், போனை கொடுத்தார். 'ஒருவரிடம் பேச வேண்டும்' என்று கூறி போனை வாங்கிய அஸ்கர், மூன்று பேரிடம் பேசினார். இதை பார்த்த மிதுன் குமார், மொபைல் போனை திருப்பிக் கேட்டுள்ளார்.

கோபமடைந்த அஸ்கர், தன் இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால், மிதுன் குமாரை தாக்கினார். தடுக்க வந்த அங்கிருந்த செக்யூரிட்டி பர்விந்தரையும் தாக்கினார். இதில், பர்விந்தரின் இடது கை உடைந்தது.

அங்கு கூட்டம் கூடுவதை பார்த்த அஸ்கர், அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து ஜெயநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, அஸ்கரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

படுகாயம் அடைந்த மிதுன்குமார், பர்விந்தர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement