நள்ளிரவில் பூப்பறிக்கும் விவசாயிகள் ஆட்கள் கிடைக்காத அவலம்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் நள்ளிரவில் பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இப்பகுதியில் உள்ள இலந்தைக்குளம், தாதப்ப நாயக்கன்பட்டி, அய்யூர் கிராமங்களில் விவசாயிகள் கிணறு, போர்வெல் பாசனத்தில் சம்பங்கி, மல்லிகை, செவ்வந்தி, டிங் டாங், ரோஸ், ரோஜா பூக்களை பயிரிட்டுள்ளனர். அவற்றை அதிகாலையே மதுரை மார்க்கெட்டிற்கு வாகனங்களில் கொண்டு சேர்க்கின்றனர். அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும், வரத்து அதிகரித்தால் விலை குறையும் என தெரிவிக்கின்றனர்.

கொண்டையம்பட்டி விவசாயி கமலக்கண்ணன் கூறியதாவது: முகூர்த்தம், கோயில் விழா நாட்களில் பூவிற்கு நல்ல விலை கிடைக்கும்.

விலை போகாமல் வீதியில் கொட்டிய நாட்களும் உண்டு. நுாறு நாள் வேலைத் திட்டத்தால் கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால் அதிகாலை 2:00 மணிக்கே குடும்பத்தினர் அனைவரும் 'டார்ச் லைட்' உதவியுடன் பறிக்கிறோம். கொடைரோடு பகுதியில் நள்ளிரவு 11:55 மணிக்கு பறிக்கின்றனர்.

அதிகாலை 5:00 மணிக்குள் மதுரை கொண்டு சென்றால்தான் உரிய விலை கிடைக்கும். 20 ஆண்டுகளுக்கு முன் வாழை, கரும்பை உற்பத்தி செய்த மண்ணில், அவற்றுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் தொடர்ந்து பூக்களை பயிரிடுகிறேன் என்றார்.

Advertisement