234 தொகுதிகளிலும் போட்டியிட தயார்: இ.கம்யூ.,

1

திருச்சி : “தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளோம். அமைப்பு ரீதியில் கட்சி வலுவாக உள்ளது,” என இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் கூறினார்.


திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு மற்றும் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு பின், அக்கட்சியின் மாநில செயலர் முத்தரசன் கூறியதாவது:



இ.கம்யூ., மாநில மாநாடு வரும் ஆக., 15 முதல் 18 வரை சேலத்தில் நடக்கிறது.



மிகப்பெரிய அளவில் நடக்கும் இந்த மாநாட்டில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


சட்டசபை தேர்தல் வருகிறது என்றதும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என பயணம் துவங்கி உள்ளார்.


தமிழகத்தை யாரிடம் இருந்து மீட்க அல்லது காக்க, அவர் பயணம் துவக்கி உள்ளார் என தெரியவில்லை. அதை, அவர் தெளிவுபடுத்தவும் இல்லை. பயணத்திலாவது அவர் தெளிவுபடுத்துகிறாரா என பார்க்க வேண்டும்.


பா.ஜ., உடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதை, அ.தி.மு.க., தொண்டர்களும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா போன்ற அக்கட்சி நிர்வாகிகளும் துளிகூட ஏற்கவில்லை. அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்து தங்களை பலப்படுத்திக் கொள்ள பா.ஜ., முயற்சிக்கிறது.


பா.ஜ.,வால் அ.தி.மு.க., காலியாக போகிறது. இந்த தவறை பழனிசாமி தெரிந்தே செய்திருக்கிறார். அதனால், அதற்காக பழனிசாமி கவலைப்படும் காலம் விரைவில் வரும்.


தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு ஏற்பட வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். ஆனால், தி.மு.க., கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை.

தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகவும்; அமைப்பு ரீதியிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலுவாகவும் இருக்கிறோம்.



இருந்தபோதும், கூட்டணி தான் முக்கியம் என்பதால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., தரப்பு எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும், அதில் போட்டியிடுவோம். முன்னதாக பேச்சு நடத்தி நல்ல முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement