எங்க வீட்டுக் குழாயில்  எப்ப தண்ணீர் வரும்

சோழவந்தான்: திருவேடகத்தில் குழாய் அமைத்து 4 ஆண்டுகளாகியும் குடிநீர் வரவில்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த நதியா கூறியதாவது: இங்குள்ள அம்மச்சியார் அம்மன் கோயில் மெயின் ரோடு, காமாட்சி அம்மன் கோயில் தெரு பகுதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைத்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதுவரை குடிநீர் வராமல் இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி பணிகளின் போது தரையில் பதித்த இணைப்பு குழாய்கள் அகற்றப்பட்டன. தற்போது அவற்றின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் குடிநீருக்காக வேறு பகுதிகளுக்குச் செல்வது, விலைக்கு வாங்கி பயன்படுத்துவது என்ற நிலை உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை என்றார்.

ஊராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது 'இப்பகுதி மேடாக இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிரமம் உள்ளது. விரைவில் புதிய மோட்டார் அமைத்து குடிநீர் வழங்கப்படும்' என்றார்.

Advertisement