11 புதிய பஸ் சேவை தொடங்கி வைத்த அமைச்சர்

சேலம்:சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில், மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புது வழித்தடம், வழித்தட மாற்றம், வழித்தடம் நீட்டிப்பு பஸ் சேவைகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


அதன்பின் அவர் கூறியதாவது: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புது பஸ் ஸ்டாண்ட் வழியாக ஜங்ஷன் வரை 6 புது டவுன் பஸ்கள், இடைப்பாடி - கொமராபாளையம், ஓமலுார் - கீரைக்காரனுார், மேட்டூரில் இருந்து, கொளத்துார், கோவிந்தபாடி வழியாக காரைக்காடு, ஆத்துாரில் இருந்து தலைவாசல் வழியாக ஊனத்துார், மேட்டூரில் இருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் வரை என, 11 புது பஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சித்தர்கோவில், காடையாம்பட்டி, இளம்பிள்ளை வழியாக பாப்பம்பாடிக்கும், ஜங்ஷன் வரை இயக்கப்பட்ட டவுன் பஸ் வேப்பிலைப்பட்டி வரை, இருபஸ் சேவைகள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல மேச்சேரி, மேட்டூர், ஆத்துார் பகுதிகளில் இருந்து, 11 பஸ் சேவைகள் வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
துணை மேயர் சாரதாதேவி, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துகழக நிர்வாக இயக்குனர் ஜோசப்டயஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement